திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நீண்ட நேரம் பணியாற்றும் மருத்துவர்களின் சிரமத்தின் மீது ஆய்வு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நீண்ட நேரம் பணியாற்றும் மருத்துவர்களின் சிரமத்தின் மீது ஆய்வு!

கோலாலம்பூர், நவ. 4 –
அதிக நேரம் பணியில் கடமையாற்றும் மருத்துவ அதிகாரிகள், கீழ்நிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு சுகாதார அமைச்சு நீண்டகாலத் தீர்வு ஒன்றை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.  ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குதான் மருத்துவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று விதிமுறை அமலில் இருந்த போதிலும், இது மேலும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில், முறையான வழிமுறை இருந்தால் நல்லது என்று சுகாதார அமைச்சு கருதுவதாக டாக்டர் சுப்பிரமணியம் மேலும் கூறினார்.

அவசர அழைப்புகளின் கீழ் பணியில் அமர்த்தப்படும் மருத்துவ அதிகாரிகள், கீழ்நிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்குத் தேவையான ஓய்வை வழங்கும் அதிகாரத்தைச் சுகாதார அமைச்சு அவர்களின் மேலதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஜூனியர் மருத்துவர்கள் வாரத்திற்கு 65லிருந்து 75 மணி நேரம் வரை பணியாற்றுகிறார்கள். ஆதலால், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற போதிலும், கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு தீவிரமாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.  கீழ்நிலை ஜூனியர் மருத்துவர்களின் வேலை நேரத்தைக் குறைத்தால், அவர்களுக்குத் தேவையான, முழுமையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியாது.

சில சமயங்களில், குறிப்பிட்ட மணி நேரத்தை விட, அவர்கள் கூடுதல் நேரம் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அமைச்சு இறங்கியுள்ளது என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். இதனிடையே, இவ்வாண்டு முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 2.46 கோடி நோயாளிகள், நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டனர் என்றும் அவர்களில், 7,90,655 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன