புக்கிட் காயூ ஹீத்தாம், நவ. 4-
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று எச்சரித்துள்ளார். மலேசியாவில் இருந்து கொண்டு மலேசிய நாட்டுத் தலைவர்களைப் பற்றி அவர் வெளிநாட்டிலுள்ள ஊடகங்களுக்குத் தகவல் கொடுப்பது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு அதன் மீது கல்லை எறிவது போலாகும் என்றார்.

பாஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றார் என சரவா ரிப்போர்ட் இணையப் பத்திரிகைக்குத் தகவல் கொடுத்ததை அம்பிகா துணிச்சலுடன் ஒப்புக் கொள்ள வேண்டும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் இதிலிருந்து நழுவிக் கொள்ளும் வகையில் உள்நாட்டு ஊடகங்களிடமிருந்து தப்பித்துச் செல்லக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

பின்னாள் இருக்கும்போதே டத்தோ அம்பிகா மிகவும் துணிச்சலானவர் என்று முன்பே எங்களுக்குத் தெரியும் என்ற அவர், முன்னாள் நிற்கும்போது அவருக்குத் துணிச்சல் வராது என்றும் அவர் சொன்னார். அவர் செய்தியாளர்களைப் பார்க்கவே அஞ்சுகிறார். அவருக்குக் கொஞ்சம்கூட துணிச்சல் இல்லை என்று உள்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார். சரவா ரிப்போர்ட்டிடம் தகவல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தால், அவர் அதனை துணிச்சலுடன் அம்பலப்படுத்த வேண்டும். அவர் சரவா ரிப்போர்ட்டுக்கு கொடுத்த அனைத்துத் தகவல்களையும் அவர் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

நேற்று புக்கிட் காயூ ஈத்தாமின் எல்லை, குடிநுழைவு, சுங்கத்துறை, நோய் தடுப்பு, பாதுகாப்புப் பிரிவின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் நஜீப் 1எம்டிபி மற்றும் பாஸ் கட்சி குறித்தும் அம்பிகாவுடன் தாம் பேசியதாக சரவா ரிப்போர்ட் இணையப் பத்திரிகையின் நிருபர் கிளேர் ரியூகாசல் பிரௌன் கூறியிருந்தார்.

பாஸ் கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் பிரதமர் நஜிப்பிடமிருந்து 9 கோடி வெள்ளியைப் பெற்றார் என்ற வழக்கில் கொடுத்த தகவலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.