லண்டன், ஜூலை.20 –
ரியல் மெட்ரிட் தாக்குதல் ஆட்டக்காரர் அல்வாரோ மொராத்தாவை வாங்க, இங்கிலாந்தின் செல்சி சம்மதம் தெரிவித்துள்ளது. 7 கோடி பவுண்ட் தொகையில் மொராத்தாவை வாங்க செல்சி, ரியல் மெட்ரிட்டுடன் இணக்கம் கண்டுள்ளது. தனிபட்ட ஒப்புதல் மற்றும் உடல் தகுதி பரிசோதனைப் பிறகு, மொராத்தா செல்சியில் அதிகாரபூர்வமாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டில் பெர்னான்டோ தோரேசை வாங்க செல்சி 5 கோடி பவுண்ட் தொகையை வழங்கியது. அதன் பின்னர் செல்சி அதிக விலைக்கு வாங்கும் ஆட்டக்காரராக மொராத்தா விளங்குகிறார். எவெர்டனின் ரொமெலு லுக்காகூவை வாங்குவதில் தோல்வி கண்ட செல்சி நிர்வாகி அந்தோனியோ கொந்தேவுக்கு மொராத்தாவின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்சி தாக்குதல் ஆட்டக்காரர் டியாகோ கோஸ்தாவுடன் , கொந்தேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து செல்சி புதிய தாக்குதல் ஆட்டக்காரரைத் தேடி வருகிறது. 24 வயதுடைய மொராத்தாவை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் ரியல் மெட்ரிட்டுடன் தொடர்ந்து பேச்சுகளை நடத்தியது.
எனினும் இரு தரப்புகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மொராத்தா, செல்சியில் இணைந்துள்ளார். கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் அணியில் மொராத்தா இடம்பெற்றிருந்தாலும், பெரும்பாலும் முதன்மை அணியில் இடம் பிடிப்பதில் தோல்வி கண்டார். கடந்த பருவத்தில் தாம் விளையாடிய 17 ஆட்டங்களில் மொராத்தா 20 கோல்களைப் போட்டுள்ளார்.
