அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்!
இலக்கியம்சமூகம்

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்!

பேயோட்டி சிறுவர் நாவல் குறித்து கோ.புண்ணியவான் அண்மையில் அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டிற்கு நேர்க்காணல் அளித்தார். அவை பின்வருமாறு:

கேள்வி:  ‘பேயோட்டி’ உங்களுடைய இரண்டாவது சிறுவர் நாவல். ஏன் தொடர்ந்து சிறுவர்களுக்காக எழுதி வருகிறீர்கள்?

பதில்: சிறுவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய மிகக் கட்டாய காலக் கட்டத்திலும், நெருக்கடியிலும் இருக்கிறோம். நம் மீதும், பொதுவாக பெற்றோர்கள் மீதும், ஆசிரியப் பெருமக்கள் மீதும். கல்வி அமைச்சு மற்றும் அதன் இலாகாக்கள் மீதும், சமூக இயக்கங்கள் மீதும் ஏட்டுக்கல்வியும் அது பெற்றுத்தரும் சான்றிதழுமே வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்ற கற்பிதத்தை வெகுகாலமாகவே வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது.

அது ஒரு வகையில் சரியல்ல. ஏனெனில் மதிப்பெண்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவது முழுமையான வாழக்கையை வாழ்வதற்கு கூதவாது. வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் அனுபவித்துச் சுவைக்க வேண்டிய ஒன்று. எனவே, நமக்கு இறைவன் கொடுத்துள்ள கலைகள் மீதும் பாதிக் கவனமாவது செலுத்தவேண்டும்.  அவற்றுள் கதைகள் கலைப் படைப்பில் மிக முக்கியமான அம்சம். எழுத்து, எழுத்தின் இயக்கம், இதனை முதன்மையாகக் கொண்டியங்குவது இலக்கியமாகும்.  அதில் ஒரு வடிவம்தான் சிறுவர் கதை. இதனை என் போன்ற எழுத்தாளர்கள் சிறிய வயதிலேயே சிறுவர்களுக்கு வலியுறுத்துவதை  முக்கியக் கடமையாகக் கருதுகிறோம். நம் மூளையின் இயக்கம் கூட எல்லாவிதக் கல்வியையும், கலைகளையும் ஈர்த்துக்கொள்ளக்கூடிய வகையிலேயே அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இன்றைய கல்விச் செயல்பாடு அதற்கு எதிர்மாறான ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மூளையை முழுமையாகப் பயன் படுத்தாமைகூட வாழ்வை முழுமையாக அனுபவிக்கத் தடையாக இருக்கிறது.

 

கேள்வி: வாழ்க்கைச் சுவையின் ஒவ்வொரு துளியையும் யாரும் அனுபவிப்பதில்லையா?

நான் இல்லையென்றே சொல்வேன். அதிக வருமானம் பெறும் இன்றைக்குள்ள பொறியியலாளர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களின் வாழ்க்கையை சற்று உற்று நோக்குங்கள்.  இவர்கள் வெகு நேரம் உழைப்பவர்கள்.  களைத்து இரவில்தான் வீடு திரும்புவர். இவர்கள் உள்மனம் ஆசைப்படும் ஒன்றை அனுபவிக்க முடியாது. படுத்துறங்கி மறுநாள் வேலைக்குச் செல்லவேண்டும்.

இவ்வாறான இயந்திர வாழ்க்கை இவர்களுடையது! பொருள் சேர்ப்பது மட்டும் வழ்க்கையில்லை என்று இவர்களில்  பலர் கவலையுறுவதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கே, இப்பரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கும் ஆயிரம் இன்பம் துய்க்க வேண்டிய இவர்கள் இவற்றை அனுபவிக்காமலேயே போய்ச் சேர்ந்து விடுகின்றனர். ஆனால் கலையில் ஈடுபடுபவன் வாழ்க்கை ரசனை மிகுந்தது. பரவசம் நிறைந்தது. அதனால்தான் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் அதனை விட்டு எளிதில் வெளியாக மாட்டான்.

 

கேள்வி: கதைக் கலைப் பற்றிச் சொன்னீர்கள். கதைக் கலை எப்படி மாணவர்களின் வாழ்க்கையைச் செப்பனிடும்? பெரும்பாலான பெற்றோர்கள்  மதிப்பெண்கள் வழி பெறப்படும் சான்றிதழே வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொடுக்கும் என்பதை நிரூபித்தே வந்திருக்கிறார்களே?

பதில்: முதலில் சான்றிதழ் வழி பெறப்படும் கல்வி எவ்வாறான மனிதனை உருவாக்குக்கிறது என்பதை  நாம் உன்னித்துப் பார்க்கவேண்டும்.

  1. நமக்குக் காலங்காலமாய் கதைகள் ஊடாகப் போதிக்கப் பட்டு வரும் அறத்தை இன்றைய ஏட்டுக்கல்வி தெரிந்தோ தெரியாமலோ நிராகரித்து வருகிறது.  அது சுயநலம் மிகுந்தவர்களை  உற்பத்தி செய்கிறது.  ஓர் உதாரணம் சொல்கிறேன். யாருக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற போட்டி மனப்பாண்மைக்கு வித்திடும் கல்வித் திட்டமே இன்றக்கு அமுல் செய்யப்படுகிறது.  இவ்வகைப் போட்டிகள் சுயநலப்போக்கை வளர்த்துவிடத் தயங்கவில்லை. ஒரு கூட்டுச் சமூகமாக வாழும் நமக்கு சுயநல புத்தி சமூக ஒற்றுமையை வளர்க்குமா என்பது சந்தேகமே.  இதனை நம் சமூகத்திலேயே கண்கூடாகப் பார்த்தே வருகிறோம்.
  2. நம் பழங்காலக் கதைகள் போதித்த எல்லா வித அறங்களையும் ஓரம் தள்ளிவிட்டு  படிப்பும் சான்றிதழும் மட்டுமே போதும் என்ற எண்ணம் நமக்குப் பொக்கிஷமாக கையளிக்கப்பட்டவற்றை( கலையை) நெஞ்சறிந்தே தள்ளுபடி செய்வது நம்முடைய போதாமை அறிவைக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான வாய்மொழிக்கதைகளில் உள்ளிருக்கும் அறம் சார்ந்த விடயத்தித்தில் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். நமக்கு எல்லாருக்கும் தெரிந்த கதை ‘ காகமும் தாகமும்’. காகம் தண்ணீரைக் கண்டைந்தது அதன் முயற்சியைக் காட்டுகிறது. அது கற்களைப் போட்டு குடத்து நீரை மேலெழுப்பியது, அதன் கூர்மை புத்தியக் காட்டுகிறது. அது தண்ணீரைத் தாகம் தீரக் குடித்தது அதன் உழைப்பும், புத்திச் சாதூர்யமும் கொடுத்த பலனை நிரூபிக்கிறது. அது  நீர் அருந்திவிட்டுப் கடைசியில் பறந்து மேல் செல்வது, முயற்சி புத்தி சாதூர்யம், வெற்றி இவை கொடுத்த விடுதலை உணர்வைக் காட்டுகிறது. இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் விடுதலையை விரும்பும் மனிதரகள்.  இக்கதை கூறும் அறம்  இவற்றைத்தான். இப்படி ஆயிரக் கனக்கான கதைகள் மதிப்பெண்கள் தேடும் படலத்தில் மாணவர்களைப் போய்ச் சேரவே இல்லை. இது எவ்வளவு பெரிய இழப்பு பாருங்கள்.
  3. உங்களின் முதல் சிறுவர் நாவல் சிவா என்ற சிறுவனின் பயமின்மையையும், சுய தேடலையும் வைத்து காட்டில் தொலைந்து போகாமல்,  அதனை விட்டு வெற்றிகரமாக வெளியேறியதைச் சொன்னது. இந்த பேயோட்டி நாவல் என்ன அறத்தைப் போதிக்கிறது.

நம் இனம் எப்போதுமே மெய்மையை அதாவது உண்மையை  நோக்கிப் பயணிக்காத  ஒரு வாழ்க்கைப் போக்கைக் கொண்டிருக்கிறது. அதாவது மூட நம்பிக்கைகளால் நிறைந்தது. இன்றைக்கும் ஆயொரம் இரண்டாய்ரம் செல்வழித்து சாமி பார்க்கும் சிந்திக்காத மனிதர்களைப் பார்க்கிறோம். படித்தவர்களும் இதில் அடங்குவர். இது ஒரு சாபக் கேடு நமக்கு. ஒருவர் செய்யும் செயல்  மெய்மையை நோக்கிச் செல்லும் திசையைக் கொண்டுள்ளதா எனபதைச் சிந்திக்காத மூட நம்பிக்கை நிறைந்த சமூகமாக இருக்கிறது. பேய் பயம் சிறார் மனதில் புகுத்தியது எது அல்லது யார்? பேய் உண்மையாக  இருக்கிறது? அப்படி இல்லை என்று மனம் நம்பினாலும் இன்னொரு மனம் இல்லாத ஒன்றைப் பற்றி அஞ்சிச் சாவது ஏன்? பாரதி அழகாகச் சொல்வான்.

நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி அஞ்சிச் சாவார்- இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சிப் பேய்களென்பார்-இந்த

மரத்திலென்பார் அந்த குளத்திலென்பார்

துஞ்சுது முகட்டிலென்பார்-மிக

துயர்படுவார் எண்ணி பயப்படுவார்…

என்று ஒரு பாடலில் பேயச்சம் பற்றிய மனித மூட மனத்தைச் சாடுவார்.

அவர் மட்டுமல்ல நம்மோடு வாழ்ந்து மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு சினிமாப் பாடலில் இன்னும் வலியுறுத்திச் சொல்வார்.

வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதின்னு

விளையாடப் போகும் போது சொல்லிவைப்பாங்க-உந்தன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே- நீ

வீட்டுக்குள்ள்ளே பயந்துகிடந்து வெம்பி விடாதே வெம்பிவிடாதே

நம் குழந்தைகளிடம் திணிக்கப்பட்ட  இல்லாத பேயச்சத்தை எத்துணைத் துலக்கமாகச் சொல்கிறார் பாருங்கள். என்னுடைய இந்த நாவல் பேய்க்குப் பயப்படும் ஒரு சிறுமியை மையமாகக் கொண்டது. அச்சிறுமியின் பள்ளித் தோழன் எவ்வாறு பேய்ப் பொய்களை கண்டுபிடித்து அச்சிறுமியைத் தெளிவுறச் செய்கிறான் என்பதை நாவல் வழிச் சொல்கிறேன். இது எளிமையான வாக்கியங்களால் ஆன நூல். இதன் வண்ண ஓவியங்கள் மாணவர்களை நிச்சயம் கவரும்.

கேள்வி: இந்நாவல் எங்கே கிடைக்கும், அதன் விலை போன்றவற்றைச் சொல்ல முடியுமா?

என் தொலைபேசி எண்ணோடு 0195580549  தொடர்புகொண்டால் அனுப்பி வைப்பேன். ஒரு நூலின் விலை RM 8.00. பள்ளிகள் 10 நூல்கள் கொண்ட கட்டாக வாங்கிக் கொள்ளலாம். அல்லது தான் படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்கும் நண்பர்களும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கோ  நீங்கள் கொடுக்க விரும்பும் பள்ளிக்கோ நேரடியாக அனுப்பி விடுவேன்.

என் முகவரி: 3203 lorong 9, Taman Ria, 08000 Kedah.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன