முகப்பு > முதன்மைச் செய்திகள் > எஸ்.எம்.சி. பேட்மிண்டன் போட்டி: கிண்ணத்தை வென்றது காஜாங் தமிழ்ப்பள்ளி!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எஸ்.எம்.சி. பேட்மிண்டன் போட்டி: கிண்ணத்தை வென்றது காஜாங் தமிழ்ப்பள்ளி!

கோலாலம்பூர், நவ, 4
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் சிலாங்கூரைச் சேர்ந்த காஜாங் தமிழ்ப்பள்ளி கிண்ணத்தை கைப்பற்றி வெற்றி வாகையை சூடியது. இப்பள்ளிக்கு முதலாம் பரிசு தொகையான 5000 வெள்ளி ரொக்கமும் சுழல் கிண்ணமும் வழங்கப்பட்டது.

மேலும், உலக புகழ்பெற்ற பேட்மிண்டன் பயிற்சி மையமான பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் 5 நாட்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற பினாங்கைச் சேர்ந்த புக்கிட் மெர்த்தாஜாம் தமிழ்ப்பள்ளி 3000 வெள்ளி ரொக்கத்தை தட்டி சென்ற வேளையில் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்ற கெடாவை சேர்ந்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் நான்காம் நிலையில் வெற்றி பெற்ற ஜொகூரை சேர்ந்த மாசாய் தமிழ்ப்பள்ளியும் முறையே 1000 வெள்ளி ரொக்கத்தை தட்டி சென்றன.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இளைஞர் படையின் ஏற்பாட்டில் 2ஆம் ஆண்டாக இப்போட்டி செராஸ் பேட்மிண்டன் அரங்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த வேளையில் அதன் நிறைவு விழாவை மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ நோர்ஸா ஸாகாரியா நிறைவு செய்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அவர் எடுத்து வழங்கினார். எஸ்.எம்.சியின் இந்த இறுதி போட்டியில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர், பகாங், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களை பிரதிநிதித்து 18 தமிழ்ப்பள்ளியை சேர்ந்த 108 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ எம்.சரவணன் கூறுகையில், விளையாட்டுத்துறையில் இந்திய மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் எடுத்துள்ள இந்த முயற்சி சிறந்ததொரு உருமாற்றமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்திய விளையாட்டுத்துறையில் தற்போது எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. மற்ற இனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இக்காலக்கட்டத்தில் விளையாட்டுத்துறை அதிக வருமானத்தை பெற்று தரும் ஒரு விளையாட்டுத்துறையாக உருவெடுத்துள்ளது. உடல்பேறு குறைந்தவர்கள் கூட பாராலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்று 1 லட்சம் முதலான பரிசு தொகைகளை பெறுகின்றனர். ஆகையால், இந்திய இளைஞர்களிடையே ஒரு சிந்தனை மாற்றம் வர வேண்டும். விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாட்டை செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் சுரேன் கந்தா கூறுகையில், விளையாட்டுத்துறையில் அனைத்துலக தரத்திலான விளையாட்டாளரை அடையாளம் காணும் நோக்கில் இந்த போட்டியை எஸ்.எம்.சி. ஏற்பாடு செய்ததாக கூறினார். ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கல்விக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கும். எதற்காக விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்த வேண்டுமென சிலர் கேட்கின்றனர். இது காலம் கடந்த சிந்தனையாகும். இக்காலக்கட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர்.

பேட்மிண்டனை எஸ்.எம்.சி. தேர்வு செய்ய காரணம் இது இந்தியர்கள் கோலோச்சித்த ஒரு விளையாட்டுத்துறையாகும். முன்னாள் பேட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளனிடம் பேசிய போது லீ சோங் வேயிற்கு அடுத்து இந்தியர்கள் பேட்மிண்டன் துறையில் சாதிக்க வேண்டுமென கூறினார். இன்றைய போட்டியில் இந்த விளையாட்டில் தரம் வாய்ந்த பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் அவர்கள் மலேசியாவின் சார்பில் கலந்துக்கொண்டு தங்கப்பதக்கங்களை வென்றால் அது இந்நாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பெருமையாக இருக்கும். ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்திய மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் விளையாட்டுத்துறையிலும் முக்கியத்துவம் அளிக்கும் என சுரேன் கந்தா கூறினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா, மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் கௌரவ பொருளாளர் டத்தோ பாராட் மணியம், எஸ்.எம்.சி. நிலைய இயக்குநர்களில் ஒருவரான பிரகாஷ்ராவ் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன