கோலாலம்பூர், நவ.6-
பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலாப நோக்கமின்றி பொருள்களை ஏற்றிச் செல்லவும் மருத்துவ உதவியாளர்களைக் கொண்டு செல்லவும் ஏர் ஆசியா நிறுவனம் தயாராக இருப்பதாக அதன் நிர்வாகத் தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன் தெரிவித்தார்.

அந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ள வெள்ளப் பேரிடர் குறித்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், சுமைகளைக் குறைக்க எங்களால் என்னென்ன செய்ய முடியுமோ நாங்கள் செய்கிறோம். பொதுவாக எந்தவொரு நிறுவனமும் சமூகத்தின் சேவைகளின்றி தனித்து வாழ முடியாது என்பதை ஏர் ஆசியா ஒப்புக் கொள்கிறது. அதுவும் இம்மாதிரியான தேவைகள் இருக்கும் நேரத்தில் உதவி செய்வது எங்களின் கடப்பாடு ஆகிவிட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு உதவிப் பொருள்களை அனுப்ப வான் போக்குவரத்துச் சேவை தேவைப்படும் நிறுவனங்கள் அவற்றின் கோரிக்கையை ‘tofoundation@airasia.com என்ற மின்னஞ்சலில் முன்வைக்க வரவேற்கப்படுகின்றன. இதில் பொருள் அனுப்பி வைக்கும் உத்தரவு மற்றும் சரக்கு துறைமுகம் ஆகியவை மதிப்பீட்டிற்குப் பின்னர் வழங்கப்படும் என்பதால் பினாங்கில் உள்ள மருத்துவப் பணியாளர்களும் தங்களின் கோரிக்கைகளை foundation@airasia.com என்ற மின்னஞ்சலில் முன்வைக்கலாம்.

அதனால் ஏர் ஆசியா வழங்கும் உதவிகள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் அதன் முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை வலம் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியுமான கமாருடின் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.