என் மகனை தேடி தாருங்கள்! தந்தை முருகன் கோரிக்கை

0
3

கோலாலம்பூர், நவ. 6-
வளைகாப்புக்காக தனது பிறந்த வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற என் மனைவி தனக்கு மகன் சர்வேஸ் (வயது 5) பிறந்ததை மறைத்ததோடு அவனை என் கண்ணில் படாமல் 5 ஆண்டுகள் மறைத்து வைத்திருப்பதாக முருகன் என்ற சந்துரு உருக்கமாக தெரிவித்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு எனக்கும் என் மனைவி காளிகாதேவிக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கினோம். அவர் கர்ப்பம் தரித்து 2012ஆம் ஆண்டு பண்டார் சன்வேயிலுள்ள தனது தாயாரின் வளைகாப்பிற்காக சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி அவரது பிறந்த வீட்டிற்கு சென்ற போதுதான் அவருக்கு ஆண் பிள்ளை பிறந்திருப்பது எனக்கு தெரிய வந்தது.

மகனுக்கு பிறப்பு பத்திரம் எடுப்பதற்காக அவரிடம் முக்கியமான ஆவணங்களை கேட்ட போது அவையனைத்தும் சன்வே மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் இருப்பதாக அவர் கூறினார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது எனது மனைவி பொய் கூறியிருப்பது எனக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தினரிடமிருந்து முக்கிய ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொண்டு தேசிய பதிவிலாகாவிற்கு சென்ற போது அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. எனது மனைவி தேசிய பதிவிலாகாவின் அதிகாரிகளை ஏமாற்றி என் மகனின் பிறப்பு பத்திரத்தை எடுத்துள்ளார். அதில் என் விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு எனது மகனுக்கு என் விவரங்கள் சேர்க்கப்பட்ட புதிய பிறப்பு பத்திரத்தை எடுத்தேன்.

என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வருகிறார். எனக்கு எனது மகனின் எதிர்காலம் மிக முக்கியம். தந்தை இல்லாமல் ஒரு பிள்ளை வாழ்வது கொடுமையானது. இவ்விவகாரம் தொடர்பில், நான் நீதிமன்றத்தின் உதவியை நாடிய போது கடந்த 2014ஆம் ஆண்டு வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை மணி 5.00 தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 7.00 வரையில் என் மகன் என்னுடன் இருக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், என் மனைவி அந்த உத்தரவை மதிக்காமல் என் மகனுடன் தலைமறையாகிவிட்டார்.

அவர் பண்டார் சன்வேயில் வேறொரு வீட்டில் இருப்பதாக தெரிகிறது. ஆனால், எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால், என் மகனை பார்க்கும் பொதுமக்கள் அதுகுறித்த தகவல்களை என்னிடம் தெரிவிக்க வேண்டும். என் மகனை பார்க்காமல் இத்தனை ஆண்டுகள் போராடி வருகிறேன். நான் உயிரோடு இருக்கும் போது நான் இறந்து விட்டதாக என் மனைவி என் மகனை ஏமாற்றி வருகிறார். எனக்கு என் மகனை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

மேலும், என் மகனை தேடித் தேடியே எவ்வளவோ பணத்தை செலவிட்டு விட்டேன். எனக்கு சமூக பொது அமைப்புகளும் வழக்கறிஞர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென முருகன் கேட்டுக்கொண்டார். மேல்விவரங்களுக்கு, 016-6204769, 018-2226169 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.