ஷா ஆலம், நவ. 6-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநில மக்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெள்ள நிவாரண உதவியாக 10 லட்சம் வெள்ளியை அறிவித்திருப்பதோடு சுமார் 185 தன்னார்வலர்களை அனுப்பியுள்ளது.

நேற்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சிலாங்கூர் மனிதாபிமான உதவிக்குழுவின் (பந்தாஸ்) தன்னார்வலர்கள் பினாங்கில் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து சேர்ந்த நிலையில் இன்று மாநில இயற்கை பேரிடர் நிர்வகிப்பு பிரிவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஊராட்சியை சேர்ந்தவர்கள் என சுமார் 185 தன்னார்வளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இது குறித்து பந்தாஸ் குழுவின் தலைவர் ஹம்சா டிஜாபில் கூறுகையில் பந்தாஸ் மற்றும் கெஅடிலான் கட்சியை சேர்ந்த சுமார் 70 தன்னார்வலர்கள் பினாங்கில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக கூறினார். அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக தூய்மைப்படுத்தக்கூடிய இயந்திரங்கள் மற்றும் பொருட்களுடன் சென்றுள்ளனர். அதில், 2 படகுகள், 2 டிரோன் கருவிகள் (பறக்கும் காமிரா கருவி), வெள்ள நீரை அகற்றும் 6 இயந்திரங்கள், 2 தண்ணீர் லாரி, 6 லாரிகள் இதில் அடங்கும் என ஹம்சா குறிப்பிட்டார்.

முன்னராக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி பினாங்கு மாநில வெள்ள நிவாரண பணிகளுக்காக 10 லட்சம் வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார். அம்மாநிலம் தற்போது எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த சிறிய உதவி வழங்கப்படுகின்றது. ஆயினும், இந்த மாநிலத்தில் வெள்ள நிலைமை தற்போது சீரடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஜோர்ஜ்டவுனில் செய்தியாளர்களை சந்தித்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

முன்னராக, அஸ்மின் அலி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை கொம்தாரில் சந்தித்து வெள்ளம் குறித்த விளக்கத்தை கேட்டறிந்தார்.