கிள்ளான், நவ. 6-

கிள்ளானில் பதினேழு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நூற்று இருபது மாணவர்களுக்கு மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் நான்கு நாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம், படிவம் மூன்று மாணவர்கள் தங்களின் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடத்தை கட்டாயமாக தேர்வு பாடமாக எடுக்கவும், தமிழ் மீது ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்டோபர் முப்பது முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை உலு சிலாங்கூர் ஆசியா முகாமில் நடைபெற்ற இம்முகாமின் இரண்டாம் நாளில் நாட்டின் துணை கல்வி அமைச்சர் மாண்பிற்குரிய ப.கமலநாதன் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். இம்முகாமில் கல்வி மட்டும் இன்றி பல்வேறு வழிகளில் எப்படி நாம் ஒவ்வோருவரும் தமிழோடு இணைந்திருக்கிறோம் என்ற விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஊட்டப்பட்டது.

ஒரு மாணவனுக்கு தமிழின் சுவையை உணர்த்தி அம்மொழியின் மீது ஈர்ப்பும் காதலும் ஏற்படுத்துவோமாயின் அதுவே அம்மாணவன் தனது தேர்வுகளில் தமிழை ஒரு தேர்வு பாடமாக எடுத்து படிக்க ஆரம்ப புள்ளியாக விளங்கும். இவ்வாறான நுணுக்கமான நோக்கத்தைக் கொண்டே இந்திய ஆத்மா சக்தி இயக்கம் (இயாசா) இம்முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நோக்கத்தையே இவ்வியகத்தின் தலைவர் திரு.வசந்தகுமார் தனது உரையிலும் சுட்டிக்காட்டினார். இவ்வாறாக எஸ்.பி.எம் வரை ஒரு மாணவனை தமிழை தேர்வு பாடமாக எடுத்து படித்தால், அது மலேசியா இந்திய சமுதாயத்தில் அதிகப்படியான தமிழ் பற்றாளர்கள் உருவாக வழிவகுக்கும். அதன் வெளிப்பாடாக எதிர்காலத்தில் தமிழ் மொழி சீரும் சிறப்புமாக பேணிக்காக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அவரைத் தொடர்ந்து பேசிய துணை அமைச்சர், மலேசியாவில் இருநூறு ஆண்டு தமிழ்க்கல்வியில் இயாசாவின் இந்த தமிழ் முகாம் ஒரு சரித்திர குறிப்பு எனக் குறிப்பிட்டார். இதுவரை மாணவர்களின் தலைமைத்துவத்தை வெளிக்கொணர முகாம் நடத்திய இயாசா, புதிய முயற்சியாக மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தழைக்கச் செய்ய தமிழ் முகாம் நடத்தியது போற்றுதலுக்குரியது என்றார். மேலும், இம்முகாமின் வெற்றியாக, எதிர்வரும் ஆண்டுகளில் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம்-இல் தமிழ் மற்றும் இலக்கியத் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை உயரும் எனும் தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

செய்தியாளர்களோடு பேசிய ஒரு சில முகாம் பங்கேற்பாளர்கள் இம்முகாம் தங்களுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தமிழின் சுவையையும் அழகையும், இம்முகாமின் பல அங்கங்களின் வழி நாங்கள் கற்று கொண்டோம். இம்முகாமில் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

மேலும், இம்முகாமின் இரண்டாம் நாளில், பிரதம துரையின் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எஸ்.கே. தேவமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்முகாமின் மாணவர்களை கண்டு பெருமிதம் கொண்ட அவர், இம்மாதிரியான முகாமே இன்றைய நம் இந்திய சமுதாயத்தில் புரட்சிக்கு ஒர் ஆரம்பம் என்றார்.

மேலும், இந்திய ஆத்மா சக்தி இயக்கத்துடன் சேர்ந்து பக்தி சக்தி இயக்கம் இதுவரை நடத்தி வந்த எஸ்.பி.எம். இலவச வகுப்புகளை சற்றே விரிவுபடுத்தி படிவம் நான்கு மாணவர்களுக்கும் இலவச வகுப்புகளை அதுவும் இயாச மையத்தில் நடத்த முடிவு செய்துள்ளதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இயாசவின் சார்பில் இயாசா மையத்தில் இனி வரும் காலங்களில் எஸ்.பி.எம் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகள் இலவசமாக நடக்கும் என இயாசா வின் தலைவர் திரு.வசந்தகுமார் தனதுரையில் குறிப்பிட்டார். தமிழ்மொழி மற்றும் படிவம் நான்கு பாட வகுப்புகளை இலவசமாக மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம், இவ்வகுப்புகளுக்கான செலவுகளை துணை அமைச்சரே பொறுப்பேற்றுக்கொள்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனுடன், முகாமின் நான்காம் நாளில் நட்சத்திர பிரபலங்களான நடிகர் பாலகணபதி, மலேசிய தமிழ்த் திரை இசை அமைப்பாளர் செதீஷ் மற்றும் கவிநாயகன் யுவாஜி அவர்களும் கலந்து கொண்டு, ‘தமிழ் மொழி மலேசிய கலைத்துறையில் அவர்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறது என்பதை தங்களது உரையில் குறிப்பிட்டனர்.

மேலும், மாணவர்களை மலேசிய கலைத்துறையில் சாதிக்கவும் ஊக்குவித்தனர். மேலும், தமிழும் விஞ்ஞானம் என்ற தலைப்பில் சிந்திப்போம் சிந்திப்போம் புகழ் டாக்டர் மணிமாறன் அவர்களும் தமிழ் இலக்கியத்தின் சுவை என்ற தலைப்பில் ராஜேந்திரனும் உரையாற்றினர்.