கோலாலம்பூர், நவ 12-

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் கடமையை முதன்மை நோக்கமாக கொண்டு வாழ வேண்டும். நாம் வாழும்போதே செய்த கடமைகள் நாம் இல்லாத காலத்திலும் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் என சுகாதார அமைச்சரும் மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

பிரதமர் துறை துணை அமைச்சரும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியின் தலைமையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இன்று விமரிசையாக நடைபெற்றது.

பிரிக்பீல்ட்ஸ், தெனாகா நேஷ்னல் நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சிறப்பு வருகை புரிந்து நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ‘ஒற்றுமையே நமது இலக்கு என்ற கருப்பொருளில் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு இதர மாநிலங்களிலிருந்து மஇகா தொடர்பு குழு தலைவர்கள் வருகை புரிந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்நிகழ்விற்கு வருகை புரிந்திருப்பது நம்மிடையே இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக பிரதமர் வகுத்து வைத்திருந்த திட்டங்கள் யாவும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் நல்ல மாற்றங்களை நாம் காணலாம் என டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியின் துணைவியார் டத்தின் சரஸ்வதி, மலேசிய இந்திய தொழில் முனைவர் வர்த்தக சம்மேளன தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், மஇகாவின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மஇகா புத்ரா பிரிவு தலைவர் யுவராஜா, தெனாகா நேஷ்னல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹஜி அஸ்மான் முகமட், மற்றும் இதர பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.