கோலாலம்பூர், நவ.15-
ம.இ.காவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் நாளை அதிகாரப்பூர்வமாக தனது செனட்டர் பதவியை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார். நாளை காலை மணி 9.00 முதல் 10.00 மணிக்குள் மேலவை தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தப்போது, டத்தோ டி. மோகன் பலதரப்பட்ட சமுதாயச் சேவைகளில் களமிறங்கினார். குறிப்பாக சமூக, சமய பிரச்னைகளுக்கும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.  முன்னதாக 2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 7376 வாக்குகளை பெற்றும் தோல்வி கண்டார். இருப்பினும் அவர் தமது சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

அதன் பிறகு ம.இ.கா. கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தேர்தல் செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா அதிரடியாக அறிவித்தது. பின்னர் மஇகாவில் பல உட்பூசல் நிகழ்ந்து மறுத்தேர்தலும் நடைபெற்றது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மீஃபா எனும் மலேசிய இந்திய கால்பந்து குழுவை உருவாக்கி, எப்.ஏ.எம். கிண்ணத்தை வென்று, மலேசிய பிரிமியர் லீக்கில் அக்குழுவை இணைய வைத்து, மலேசிய இந்தியர்களுக்கு பெருமையை ஏற்படுத்தினார். இவை அனைத்திற்கு பரிசாக இந்த செனட்டர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அவரின் விசுவாசிகள் கூறுகின்றார்கள்.