கடவுளே ஆண்டாலும் நாம்தான் உழைக்க வேண்டும் – டத்தோ சரவணன்

0
11

கோலாலம்பூர், நவ.25 –

நாட்டைக் கடவுளே  ஆண்டாலும்,  உழைத்தால்  மட்டுமே சிறப்பாக வாழ முடியும் என இளைஞர் விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வளமாக வாழ பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.  இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்பவர்கள் மட்டுமே சிறப்பாக வாழ்கின்றனர்.

தகவல் துறை ஏற்பாட்டில் கிளானா ஜெயா  ம.இ.கா தொகுதியின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற திறன்சார் சமுதாயம் நிகழ்ச்சியை  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து எழுச்சி உரையாற்றியபோது சரவணன் இதனைத் தெரிவித்தார்.

வாய்ப்புகள் தானாக அமையாது. நாம்தான் அதனைத் தேடி செல்ல வேண்டும். மலேசியா போன்ற நாட்டில் வளமாக வாழ, வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளாமல் அரசாங்கத்தைக் குறைக் கூறுவது ஏற்புடையதல்ல என அவர் கூறினார்.

‘வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் அவர் சுமந்த அவமானமங்கள், சந்தித்த போராட்டங்கள் சிந்திய கண்ணீர், தூங்காத இரவுகள் போன்ற எத்தனை துன்பங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வெற்றிப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.

‘பிள்ளைகளுக்காக, உங்கள் குடும்ப மேம்பாட்டுக்காக தியாகம் செய்யுங்கள். தியாகங்களை செய்பவர்களே வாழ்க்கையில் வெற்றியடைகின்றனர்.

பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை வழங்குங்கள். கல்வி அழியாச் செல்வம். உங்கள் பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு, அத்துறையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள், வாழ்க்கையில் வெற்றிப்பெறச் செ ய்யுங்கள் என சரவணன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 340 மாணவர்களுக்கு புத்தக பைகளும், பள்ளி உபகரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. ஐந்தாவது முறையாக தகவல்துறை இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

இதனிடையே இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் இந்திய சமூகத்திற்கு தேவைப்படும் உதவிகளை தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருவதாக கிளானா ஜெயா ம.இ.கா தொகுதித் தலைவர் டத்தோ எஸ்.எம் முத்து தெரிவித்தார்.

அரசாங்கத்தைத் தொடர்ந்து குறைக் கூறாமல்,  வழங்கப்படும் வாய்ப்புகளையும் உதவிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என எஸ். எம் முத்து கூறினார்.