வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேர்தல் நெருங்கினால் அனுதாபத்தை தேடுவார் வேதமூர்த்தி! – டத்தோஸ்ரீ தேவமணி
சமூகம்முதன்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கினால் அனுதாபத்தை தேடுவார் வேதமூர்த்தி! – டத்தோஸ்ரீ தேவமணி

கோலாலம்பூர், நவ. 27- 

ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி ம.இ.காவையும் தேசிய முன்னணியைப் பற்றியும் குற்றம் சாட்டிப் பேசியதை ம.இ.கா.வின் துணைத் தலைவரான டத்தோ எஸ்.கே. தேவமணி வன்மையாக மறுத்துள்ளார். எனக்கு வேதமூர்த்தியைப் பற்றித் தெரியும். தேர்தல் நெருங்கி வரும்போது, மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற அவர் முனைகிறார் என்பதை நான் அறிவேன் என தேவமணி குறிப்பிட்டுள்ளார்.

2007இல் ஹிண்ட்ராப் நடத்திய எதிர்ப்புப் பேரணி என் மனதைத் தொட்டது. நான் அவர்களை மதிக்கிறேன். ஹிண்ட்ராப் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நன்றாக எதிர்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்டோம். அதற்கான விலையை தேசிய முன்னணி ஏற்கனவே கொடுத்துவிட்டது. அப்பேரணிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில், அது பல தொகுதிகளை இழந்ததை ஒப்புக் கொள்கிறோம் என தேவமணி குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியும் ம.இ.கா.வும் இந்தியர்களை மேம்படுத்த மனப்பூர்வமாகச் சிந்தித்து, பல செயல் திட்டங்களைச் செய்துவருகிறது. வேலை வாய்ப்பு, கல்வி, வறுமை மற்றும் பல பிரச்னைகளைக் கவனித்து, அவற்றின் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பதற்கு நாங்கள் ஆவன செய்து வருகிறோம். 2008-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்தியச் சமூகத்திற்கான அமைச்சரவைக் குழு பிரதமரால் அமைக்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் உட்பட, தொடர்ச்சியான பல திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிமுகப்படுத்தியுள்ளார். பிரதமரின் அலுவலகத்திற்குள்ளேயே இன்னும் பல முயற்சிகள் வரையப்பட்டுள்ளன. அமைச்சர்கள், ம.இ.க.ா மற்றும் அனைத்து தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் உதவியுடன் மலேசிய இந்தியர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய சமூகத்திற்காக, இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், மலேசிய இந்திய மேம்பாட்டுத் திட்டமான புளூபிரிண்ட்டை பிரதமர் அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டில், இந்தியர்களின் வறுமை நிலைக்கு ம.இ.கா.வைக் குற்றம் சாட்டியதோடு தேசிய முன்னணிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று கூறிய வேதமூர்த்தியின் கருத்துக்களுக்கு தேவமணி இவ்வாறு பதிலளித்தார்.

மஇகா இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதை முற்றிலும் அழிக்க, ஹிண்ட்ராப் பாடுபடும் என்றும் வேதமூர்த்தி கூறியுள்ளார். ஹிண்ட்ராப்பின் ‘தேசிய முன்னணிக்குப் பூஜ்ஜியம் வாக்கு (ஸீரோ வோட் ஃபோர் பிஎன்) பிரசாரத்தின் துவக்க விழாவில், கலந்து கொண்டு உரையாற்றியபோது, தேசிய முன்னணியின் 50 ஆண்டு ஆட்சியில் மஇகா இந்திய சமூகத்தை முற்றிலும் தோல்வியடையச் செய்துள்ளதாக வேதமூர்த்தி சாடியுள்ளார்.

ஓராண்டு பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருந்த வேதாவுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்திய சமூகத்திற்குப் பல பயனுள்ள திட்டங்களை மேற்கொள்ள தற்போதைய நஜீப்பின் தலைமையிலான அரசு முயன்று வருகிறது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வந்து பாருங்கள். இந்திய சமூகத்தின் நலனுக்காக பாடுபட எங்களோடு ஒத்துழையுங்கள் என தேவமணி கேட்டுக் கொண்டார்.

நீங்கள் எங்களை நசுக்குவதற்காகப் ஆத்திரப்பட்டு போராட வேண்டாம். ஒரு கோபமான நபர் நீண்ட தூரம் செல்ல முடியாது என்றும் தேவமணி அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன