சனிக்கிழமை, நவம்பர் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எதிர்கட்சியினரால் இந்தியர் பிரச்னைகளில் தீர்வு காண முடியாது! -டத்தோ கோகிலன் பிள்ளை
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியினரால் இந்தியர் பிரச்னைகளில் தீர்வு காண முடியாது! -டத்தோ கோகிலன் பிள்ளை

கோலாலம்பூர், நவ. 27-
நம்பிக்கை கூட்டணி வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினால் இந்தியர்களின் சிவப்பு அடையாள அட்டை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமானா கட்சியின் தேசிய தலைவர் மாட் சாபு கூறியிருப்பது குறித்து கெராக்கான் கட்சியின் உதவித்தலைவர் டத்தோ கோகிலன்பிள்ளை சாடினார்.
பொதுமக்கள் சார்ந்த இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் மாற்றி மாற்றி பேசுவதாக அவர் கூறினார். மலேசிய மக்கள் மத்தியில் பொய்யான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் நம்பிக்கை கூட்டணி மீண்டும் ஒரு வெற்று வாக்குறுதியை அளிக்கின்றது. இதற்கு முன்னர் 300,000 மலேசிய இந்தியர்களுக்கு குடியுரிமை பிரஜை இல்லை என கூறினர்.
ஆனால், இன்று வரையில் அவர்களது குற்றச்சாட்டிற்கான வகுவான ஆதாரம் இல்லை. அதனால், இப்போது இந்தியர்களின் சிவப்பு அட்டை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அவர்கள் கூறியிருப்பதை நம்ப முடியாது. நம்பிக்கை கூட்டணியின் அனைத்து இனிப்பு வார்த்தைகளும் 14ஆவது பொதுத்தேர்தலில் வென்று புத்ராஜெயாவை கைப்பற்றுவதாகும். இது அவர்களின் சுயநல போக்கை காட்டுகின்றது.
தேசிய முன்னனி அரசாங்கம் இந்தியர்களுக்காக மை டஃப்தார், இந்திய சமூக மேம்பாட்டு வரைவு திட்டம் (எம்.ஐ.பி), சீட் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டுள்ளது. ஆனால், சிலாங்கூர், பினாங்கில் இந்தியர்களுக்காக என்ன திட்டங்களை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர்? என கோகிலன் பிள்ளை கேள்வியெழுப்பினார்.
அவ்விரு மாநிலங்களையும் கைப்பற்றிய எதிர்கட்சியினர் இந்திய சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி மாற்றங்களை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தேசிய முன்னணியை குறை சொல்லவும் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதிலும் குறியாக உள்ளனர்.
இந்தியர்களின் சிவப்பு அடையாள அட்டை விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு எதிர்கட்சியினர் இன்று வரையில் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதனால், தேசிய முன்னணியை விமர்சிக்க அவர்களுக்கு அருகதை இல்லை என கோகிலன் பிள்ளை கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன