அறிக்கை விட்டே அரசியல் நடத்துங்கள்! – மைபிபிபி மீது பார்த்திபன் காட்டம்

கோலாலம்பூர், நவ. 27-

கட்சியின் தலைவருக்கு விசுவாசமாக இருப்பது சாதாரணமான ஒன்று என்றாலும் அதில் துளி அளவாவது உண்மை இருக்க வேண்டும். அதைவிடுத்து, கோமாளித்தனமாக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்வது சிறப்பென்று மைபிபிபி கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் சைமனுக்கு, கேமரன்மலை ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் பார்த்திபன் நினைவுறுத்தினார்.

யார் அசல்? யார் காபிகேட் என்று பேசுவதற்கு முன் நமது நிலை என்ன என்பதை யோசித்து பார்த்திருக்க வேண்டாமா? கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவிற்கு சொந்தமானது? அதுமட்டுமின்றி மூன்று தேர்தல்களில் ம.இ.கா. இத்தொகுதியை வென்றுள்ளது. நாம் கொல்லைப்புறமாக நுழைந்து எளிதாக இத்தொகுதியை வென்று விடலாம் என்று நினைப்பதுதான் அசலா?

இதே சாமர்த்தியத்தை இதர கட்சிகளின் தொகுதிகளில் காட்டினால் என்ன நடக்குமென்று தெரியுமா? தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாக இருந்து கொண்டு, மற்ற கட்சியின் தலைமைத்துவத்தை சீண்டிப் பார்ப்பது மைபிபிபியின் தலைமைத்துவதிற்கு அழகா? என பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். பங்காளி கட்சிகளை குறை கூறுவது முறையற்ற செயல் என்பதால் மைபிபிபி எந்த அறிக்கையை வழங்கினாலும் பதில் அறிக்கை வழங்காமல் இருந்தோம். ஆனால் கோமாளித்தனத்திற்கு ஒரு அளவு இருக்கிறது என்றார்.

மைபிபிபி கட்சியை பார்த்து மஇகா காப்பிகேட் செய்வதாக கூறியிருப்பது நகைக்கும் வகையில் இருக்கிறது. காரணம் மஇகா தேசிய இளைஞர் பிரிவுத்தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சிவராஜ் பல ஆண்டுகளாக நாடளாவிய நிலையில் பல நிகழ்ச்சிகளையும் போட்டி விளையாட்டுகளையும் நடத்தி வருகிறார். ஆனால் மைபிபிபி கால்பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தியதால் மஇகாவும் நடத்தியதாக கூறியிருப்பது கோமாளித்தனத்தின் உச்சக் கட்டம்.

மஇகா சிறப்பான முறையில் செயலாற்றி வருவதை காண பொறுக்காத மைபிபிபியினர் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே போல் தீபாவளி விருந்தில் வெறும் 500 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறுவதற்கு முன் சரியான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்விற்கு மலேசியா தகவல் இலாகா தலைமை இயக்குநர், இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், சிறப்பு காவல் பிரிவு அல்லது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைபிபிபி உறுப்பினர்கள் ஆகிய யாரிடமாவது விவரம் கேட்டிருந்து பிறகு செய்தி வழங்கியிருக்கலாம். அல்லது நிகழ்ச்சி புகைப்படங்களை பார்த்தாவது பேசியிருக்கலாம்.

மசீச உறுப்பினர்களே 50 பேர் வருகையளித்த நிலையில் எதை வைத்து 20 சீனர்கள் தான் வருகை புரிந்தனர் என்று சைமன் கூறினார் என்று விளங்கவில்லை. மற்ற இடத்தில் உள்ள வாக்காளர்களைக் கூட்டி வந்து கூட்டம் காட்டவில்லை. முழுக்க முழுக்க 3500க்கு மேல் கேமரன் மலை வாக்காளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அப்படி திறனிருந்தால் இல்லை என்று சான்றுடன் நிரூம்பியுங்கள்.

எங்கேயோ உட்கார்ந்து கொண்டு வெற்று அறிக்கைகளை வெட்டியாக கொடுத்து, இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மானத்தையும் வாங்கிக் கொள்ளாதீர்கள் தேசியத் தலைவர் கேமரன் மலையில் போட்டியிட வேண்டும் என்ற உங்களின் ஆதங்கத்தால் மனநோயாளியாகி இருக்கும் மைபிபிபி தகவல் பிரிவுத்தலைவர் சைமன் உடனடியாக மனநல மருத்துவரை முதலில் சென்று பார்க்குமாறு பார்த்திபன் தமது அறிக்கையில் கூறினார்.