கருப்புப் பட்டியலில் 790,186 பேர்

சிப்பாங், நவ.27-

மலேசியர்களில் 790,816 பேர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் இருந்து குடிநுழைவுத் துறையால் கருப்புப் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 50 விழுக்காட்டினர் பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் என்று குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.

பிடிபிடிஎன் கடன் பெற்றவர்களில் தங்கள் கடனை இன்னும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 447,890 பேர்தான் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் ஆவர். அதோடு மட்டுமின்றி 138,028 பேர் திவால் துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் (107,884), இபிஎப் (7,024) அரச மலேசிய சுங்கத் துறை (6,091), குடிநுழைவுத் துறை (1,543) மற்றும் 81,726 மலேசியர்கள் இதர நிறுவனங்களில் கருப்புப் பட்டியலிடப்பட்டு உள்ளனர்.

இதில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க தங்களின் தகுதியைச் சரிபார்த்துக் கொள்வதற்கு ஏதுவாக கருப்புப் பட்டியல் கியோஸ்க் சரிபார்ப்பு சேவையைக் குடிநுழைவுத் துறை ஏற்படுத்தியுள்ளது.

கேஎல்ஐஏவின் புறப்படும் நிலையத்தில் இதற்கான 3 கியோஸ்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், இதே போன்ற சேவை கேஎல்ஐஏ2எஇல் இன்னும் 1 மாதத்தில் அமல்படுத்தப்பட்டு விடும். நாட்டின் இதர விமான நிலையங்களில் அவ்வப்போது அமல்படுத்தப்படும் என்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் கியோஸ்க் அறிமுக விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் முஸ்தபார் குறிப்பிட்டார்.