வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அன்வாரை விடுவிக்கும் தீர்மானம் : நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அன்வாரை விடுவிக்கும் தீர்மானம் : நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது

கோலாலம்பூர், நவ. 28-

சிறையில் உள்ள எதிரணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை விடுவிப்பது மீது விவாதம் நடத்தக் கோரி பாடாங் ரெங்காஸ் பிகேஆர் உறுப்பினர் என்.சுரேந்திரன் கொண்டுவந்த அவசரத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. அன்வார் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டத்தைச் சுட்டிக்காட்டிய மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ பெண்டிகார் அமின் மூலியா, தீர்மானத்தை நிராகரித்தார்.

நீதிமன்றத்தில் நியாயமான முறையில் வழக்காடப்பட்டு குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டதாகத்தான் நான் காண்கிறேன். சட்டப்படியான உத்தரவின்படிதான் அன்வார் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பெண்டிகார் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 6-இல், மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு (ஏபிஎச்ஆர்), அன்வார் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, சுரேந்திரன் இந்த அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியுற்ற சுரேந்திரன், அதற்கான காரணத்தை நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் வினவினார். வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால் மட்டுமே அதைப் பற்றி விவாதிக்க முடியாது. அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், இந்த விவகாரத்தை ஏன் விவாதிக்கக்கூடாது என வினவினார்.

ஆனால், இன்றைய கூட்டத்துக்குத் தலைமையேற்றிருந்த துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரோனல்ட் கியாண்டி அவரது கோரிக்கையை மறுத்து மக்களவைத் தலைவர் முடிவு செய்துவிட்டார் அதுவே இறுதியானது என்றார். அதற்கு சுரேந்திரன், இது ஒருதலைச் சார்பான முடிவாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க முடியாவிட்டால் வேறு எங்கு விவாதிப்பது, வெளியிலா, அப்படிச் செய்தால் அது தேச நிந்தனைக் குற்றம் என்பார்கள். நாங்கள் அரசாங்கத்தைக் குறைகூறும் தீர்மானத்தைக் கொண்டுவரும் போதெல்லாம் அது நிராகரிக்கப்படுகிறது. இது பாரபட்சமாகத் தெரிகிறது என்றார் சுரேந்திரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன