கோலாலம்பூர், நவ, 28-

அடையாள ஆவணப் பிரச்சனைகளைக் களைவதில் முனைப்பு காட்டி வரும் டிரா மலேசியா 2011ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் இலாகாவுடன் இணைந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  தன்னார்வ இயக்கமான டிரா மலேசிய இந்தியர்களிடையே அடையாள ஆவணப் பிரச்சனையைக் களைவது ஒன்றே நோக்கமாக கொண்டு அரசியல் கட்சிகள், சமூக தலைவர்கள், பொது இயக்கங்கள், ஊடக நண்பர்கள் என அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி வருவதும் அனைவரும் அறிந்ததே.

அண்மையில் நிருபர்களைச் சந்தித்து பேசியிருந்த டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னபன், 2014 ஆம் ஆண்டிலிருந்து டிரா மலேசியா நான்கு மாநிலங்களில் நடத்திய கணக்கெடுபின் படி அடையாள ஆவணப் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் 12,392 பேரை அடையாளம் கண்டுள்ளதாக கூறியிருந்தார்.

அதனை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள செய்தியில் 2011 அரசினால் உருவாக்கப்பட்ட மைடஃப்தார் இயத்தினால் அரசாங்கத்திற்கோ பொது மக்களுக்கே எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று தான் கூறியிருப்பதாக சொல்லப்பட்டதை டிரா சரவணன் மறுத்தார்.

தொடக்கத்தில் இருந்தே மக்களிடையே நிலவி வரும் அடையாள ஆவணப் பிரச்னைகளை பொதுபார்வைக்கு கொண்டு வந்து விழிப்புணர்வை விதைப்பதில் ஊடங்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளதாக கூறிய சரவணன். தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடக நண்பர்களின் சேவை சமூகத்திற்கு என்றும் தேவை என்றும் கூறினார்.

இதுபோன்ற பிரச்னைக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஊடகங்களுக்கு தன்னுடைய நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார். ஆனால், முன் கூறிய கூற்று தன்னுடைய அறிக்கையில் இடம் பெறவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.