கோலாலம்பூர், ஜூலை 21-

1990ஆம் ஆண்டுகளில் தாம் நிதி அமைச்சராக இருந்தபோது அந்நிய செலவாணி முதலீட்டில் ஏற்பட்ட இழப்பீடு மீதான அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.  எனினும், அந்த இழப்பிடு துன் மகாதீரால்தான் ஏற்பட்டது என அவரைத் தாக்கிக் குறைசொல்லக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், அரசியல் விளையாட்டுக்குத் தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நம்பிக்கை கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  அப்போது, அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு அதற்கு பொறுப்பேற்றிருந்த டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப்பையும், பேங்க் நெகாரா கவர்னர் டான்ஸ்ரீ ஜபார் ஹுசேனையும் ராஜினாமா செய்வதைக் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அன்வார், அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் ஒத்துழைக்கவும் தயார் என தெரிவித்தார்.

அதேவேளையில், துன் டாக்டர் மகாதீர் முகமட்டை தாக்குவதற்கு இதனை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்து விட்டதால், இதன் தொடர்பான விசாரணை வரும் 3 மாதங்களில் முடிவுறும் என்று பிரதமர் துறை அலுவலகம் நேற்று இரண்டு நாள்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கை குறித்து விவரிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அரச விசாரணை ஆணையத்திற்கு பெட்ரோனாஸ் தலைவர் டான்ஸ்ரீ முகமட் சீடேக் ஹசான் தலைமையேற்கும் வேளையில், உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ கமாலுடின் முகமட் சாயிட், மலேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ தாஜூடின் அதான் உட்பட ஐவர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  பேங்க் நெகாராவை உள்ளடக்கி கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இந்த நிதி மோசடியில் நாட்டிற்கு வெ. 2,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு வரை சுமார் 22 ஆண்டுகள் பிரதமராக துன் டாக்டர் மகாதீரின் துணைப் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இருந்த காலத்தில் நிகழ்ந்த இழப்பீடு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணைக்குழு குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிதி இழப்பு குறித்த விசாரணையில் அன்வார் சில விவகாரங்களை வெளியிடுவார் என்பதால் டாக்டர் மகாதீர் இப்போது அன்வாருடன் நண்பராக நடித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அண்மையில் குற்றம் சாட்டினார்.

நஜீப் குற்றம் சாட்டுவதுபோல் அன்வாரின் சாட்சியத்திற்குத் தாம் ஒருபோதும் அஞ்சவில்லை என்று அண்மையில் கூறிய டாக்டர் மகாதீர், இது என் மீது உள்ள தவற்றை தேடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இவ்விவகாரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் யாருக்கும் இல்லை. மாறாக, தன் வாயை மூடுவதற்காக நஜீப் மேற்கொண்டுவரும் முயற்சியே இது என்றும் டாக்டர் மகாதீர் அண்மையில் கூறியிருந்தார்.-