பிரதமர், துணைப் பிரதமர் பங்கேற்கும் மக்கள் சக்தியின் பேராளர் மாநாடு! இந்திய சமுதாயத்திற்கு சிறப்பு அறிவிப்பா?

கோலாலம்பூர், டிச, 1-

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதமர், துணைப் பிரதமர் உட்பட தேசிய முன்னணியின் முதன்மைத் தலைவர்கள் கலந்து கொள்வதால், எதிர்பார்ப்பு கூடியுள்ளது. குறிப்பாக இந்திய சமுதாய மேம்பாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது பேராளர் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா, பேங்க் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

அவரோடு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோருடன் தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சிகள், தோழமை கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இத்தருணத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைக்கப்படுமென மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார் கூறினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சி 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட ஆயுத்தமாகி வருகிறது. அதற்கு வாய்ப்பு வழங்கும் படி கோரிக்கை முன்வைக்கப்படுமென அவர் கூறினார். தேசிய முன்னணி அனைத்து தொகுதிகளிலும் தமது உறுப்புப் கட்சிகளின் துணையோடு போட்டியிடுகின்றது. அதில் 2 நாடாளுமன்றம் 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மக்கள் சக்தி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென டத்தோஸ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.

மக்கள் சக்தி கேட்கும் தொகுதிகளில் முன்னதாக தேசிய முன்னணி தோல்வி கண்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் தேசிய முன்னணிக்கு வெற்றியை கொண்டு வர மக்கள் சக்தி கடுமையாகப் போராடுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். அன்றைய தினம் மக்கள் சக்தி கட்சியின் 2300 உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியும் காத்திருக்கின்றது. அது குறித்து விளக்கம் கேட்டபோது, அந்த விசயம் ஞாயிற்றுக்கிழமை வரை இரகசியமாக இருக்குமென டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க 14ஆவது பொது தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மாநாட்டை திறந்து வைக்கும் பிரதமர், தேர்தல் நடவடிக்கை கேந்திரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாநாட்டில் சிறப்பு பிரமுகராக இந்திய நாடாளுமன்றத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் பி.ராமசாமியும், சசிகலா புஷ்பாவும் கலந்து கொள்கிறார்கள். இதில் டாக்டர் பி.ராமசாமி இளைஞர்களின் மேம்பாடு குறித்து உரை ஆற்றும் வேளையில் சசிகலா புஷ்பா பெண்கள் விழிப்புணர்வு குறித்து தமது கருத்துகளையும் முன்வைக்கவிருக்கிறார். மொத்தத்தில் மக்கள் சக்தி கட்சியின் இந்த மாநாடு வரலாற்றில் இடம் பிடிக்குமென டத்தோஸ்ரீ தனேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.