அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அரசியல் சட்டத்திற்கேற்ப  பூமிபுத்ரா தகுதி!
முதன்மைச் செய்திகள்

அரசியல் சட்டத்திற்கேற்ப  பூமிபுத்ரா தகுதி!

கோலாலம்பூர், ஜூலை 21-

ஒட்டுமொத்தமாக அனைத்து மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா எனும் அங்கீகாரம் அளிப்பது சரியாக இருக்காது என மலேசிய இந்திய முஸ்லிம் சங்கமான கிம்மாவின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காதர் குறிப்பிட்டுள்ளார்.  எவர் ஒருவர் 5ஆவது அல்லது 6ஆவது தலைமுறையாக இந்நாட்டில் வசிக்கிறரோ, அவரே பூமிபுத்ரா அந்தஸ்தைக் கொண்டவராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் இங்கு நான் பிறந்தேன். நாங்கள் மலாய் மொழியில்தான் பேசுகிறோம். மலாய் பாரம்பரியத்தை தான் பின்பற்றுகிறோம். எங்களுக்கு இந்தியாவில் எந்த உறவினர்களும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதியை அரசு வழங்குமாயின், முதலில் அது ஒவ்வொருவரின் குடும்ப பின்னணியையும் ஆராய வேண்டும். ஒட்டுமொத்தமாக அப்படியே அங்கீகரித்து விடக்கூடாது. அப்படிச் செய்வது என்னைப் போன்று இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவோருக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடும் என்று சைட் இப்ராகிம் தெரிவித்தார்.

இடைப்பட்ட காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் பூமிபுத்ரா என்ற அந்தஸ்து வழங்குவது நியாயமாகாது. மேலும், பூமிபுத்ரா என்ற தகுதியை நாங்கள் கோருவதானது, எங்களை மலாய்க்காரர்களாகக் கருதவேண்டும் என்று நாங்கள் விரும்புவதாக பொருள்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களாகவே இருக்க விரும்புகிறோம். மலாய்க்காரர்களாக அல்ல. நாங்கள் வேண்டுவதெல்லாம் பூமிபுத்ராக்களுக்கான சலுகைகளைத்தான்.   மேலும் தங்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து அளிக்கப்படுவதானது கூட்டரசு அரசியல் சட்டத்திற்கு ஏற்ப அமைதல் வேண்டும் என்றார் அவர்.  தங்களை பூமிபுத்ராக்களாக அங்கீகரிக்கவேண்டும் என்று இந்திய முஸ்லிம்கள் விடுத்து வரும் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் மிக ஆழமாக ஆராய விருப்பதாக மூன்று நாள்களுக்கு முன்தினம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்ட சைட் இப்ராகிம், எங்களின் பெரும்பாலான உறவினர்கள் மலாய்க்காரர்கள் தான். எங்களின் கலாசாரங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லை. பல மலாய்க்காரர்கள், எங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன