பதவியை ராஜினாமா செய்யுங்கள் ; விஷாலை நெருக்கும் சேரன் !

0
20

சென்னை , டிச.5 :

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதென்றால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுங்கள் என்று நடிகர் விஷாலுக்கு இயக்குனர் சேரன் நெருக்கடி கொடுத்துள்ளார். மேலும் விஷால் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை வைத்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக இயக்குனர் சேரன் குற்றம்சாட்டியுள்ளார். விஷால் தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனரும், தயாரிப்பாளருமான சேரன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது : கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால், 2.12.2017 அன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தெரிவித்து,  வேட்பு மனு தாக்கலுக்கும் சென்றுள்ளார்.

விஷாலின் இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. விஷால் அரசியலுக்கு வருவதாலோ ஆர்கே நகரில் வேட்பாளராக நிற்பதாலோ அதிர்ச்சியடையவில்லை. 1730 உறுப்பினர்களைக் கொண்ட வருடத்திற்கு 500 கோடி வர்த்தகம் செய்யும் தொழிலாகிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் நலன் பற்றி துளி கூடி கவலைப்படவில்லை.

ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் விஷால் சிறுபிள்ளைத்தனமாக ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கியுள்ளார். தன்னை மட்டுமே உயர்த்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கப் பெயரை விஷால் பயன்படுத்துகிறார். தயாரிப்பாளர் சங்கம் என்பது அரசைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

திரைத்துறை மானியம், வரி, வரிக்குறைப்பு, டிக்கெட் விலை நிர்ணயம், பைரசி திருட்டு, ஆன்லைன் பைரசி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அரசாங்கம் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி இருக்க அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பது, அமைச்சர்களை விமர்சிப்பது போன்ற செயல்களாலும், அரசியலில் குதிப்பதாக சொல்லும் அறிவிப்புகள் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும்.

அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் விஷால் சம்பாதிக்கிறார். எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது. இதனால் திரையுலகம் சார்ந்துள்ள தொழிலாளர்கள் 10லட்சம் பேரை பாதிக்கும்.

தயாரிப்பாளர் சங்கத்தலைவரான 8 மாதத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே விஷால் நிறைவேற்றவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் சங்க வேலைகளில் கவனம் செலுத்த முடியாது, உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

ஒன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிட்டால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுவை வாபஸ் பெறுங்கள். விஷால் பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் மட்டுமே தயாரிப்பாளர் சங்கப் பதவியை பயன்படுத்துகிறார் என்றும் சேரன் குற்றம்சாட்டியுள்ளார்.