கோலாலம்பூர், டிச. 5 – 

சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவின் மீது தாம் தொடுத்திருந்த வழக்கை மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரான ஏகே ராமலிங்கம் மீட்டுக் கொண்டதோடு, இனி மஇகாவுடன் இணைந்து ஒரே குடும்பமாகச் செயல்படப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஞாயிற்றுகிழமை அனைத்து மாநில பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், தாங்கள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக ராமலிங்கம் தெரிவித்தார்.

அவருக்கு வாக்களித்ததை போலவே தமது வழக்கை மீட்டுக் கொள்வதாக இன்று  தலைநகர் உமாராணி உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராமலிங்கம் குறிப்பிட்டார். இன்னும் சில மாதங்களில் நாம் 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அதில் மஇகாவின் வேட்பாளர்கள் போட்டியிடக்கூடும் அனைத்துத் தொகுதிகளிலும் தாம் தீவிரமாகச் செயல்பட்டு கட்சியின் வெற்றியை உறுதி செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.

அதோடு, தேசிய முன்னணி கலமிறங்கும் அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் அணி மஇகாவுடன் இணைந்து செயல்படும் என பத்து தொகுதி ம.இ.கா.வின் முன்னாள் தலைவருமான ராமலிங்கம் தெரிவித்தார்.

‘இப்போது கட்சிக்கு நான் மீண்டும் கிளைத் தலைவராக இணையவிருக்கிறேன். இதன் பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடிவு செய்திருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மஇகாவின் மீது எந்தவொரு வழக்கும் எனது தரப்பிலிருந்து பதிவாகாது.

மஇகாவில் கட்சி பிளவுக்கு இனி இடமிருக்காது. ஒரே கட்சியாகதான் இயங்கப் போகிறோம் என அவர் உறுதி கூறினார். மஇகாவின் தேசிய தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு நாங்கள், எங்களின் முழு ஆதரவை வழங்குகிறோம் என அவர் தெரிவித்தார்