மஹாதீரால் ஏன் நஜிப்பை வீழ்த்த முடியவில்லை – அனுவார் மூசா!

0
10

கோலாலம்பூர், டிச.5 –

மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட், தமது வாழ்நாளில் பல அரசியல் தலைவர்களை வீழ்த்தியுள்ளார். ஆனால் நாட்டின் நடப்பு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கை மட்டும் அவரால் வீழ்த்த முடியவில்லை என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டான் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டுத் தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மஹாதீர், தெங்கு ரசாலி ஹம்சா, துன் மூசா ஹீத்தாம், துன் கபார் பாபா , டத்தோ ஶ்ரீ அனுவார் இப்ராஹிம் ஆகியோரை பதவியில் இருந்து வீழ்த்தியுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகியப் பின்னர், நாட்டின் ஐந்தாவது பிரதமரான துன் அப்துல்லா அஹ்மாட் படாவியும் பிரதமர் பதவியில் இருந்து வீழ்வதற்கு மஹாதீர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டுத் தொடங்கி நஜிப்பை வீழ்த்த மஹாதீர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாக அனுவார் கூறினார்.

இதற்கு காரணம், அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்களுடன் நஜிப் கொண்டுள்ள அணுக்கமான உறவே காரணமாகும். ஆனால் மஹாதீர் தம்முடைய தலைமைத்துவத்தில் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

மஹாதீர் ஓர் அரசியல் சாணக்கியன் என கருதி முன்னாள் துணைப் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் மட்டுமே அவரை சுற்றி கொண்டிருக்கிறார். ஆனால் மஹாதீரின் அரசியல் முடிவுக்கு வந்து விட்டதாக அனுவார் மூசா கூறினார்.