வழக்கை சந்திக்க தயார் – கோமேசுக்கு சவால் விட்ட துங்கு இஸ்மாயில்!

0
13

ஜோகூர் பாரு, டிச.5–

ஜே.டி.தி எனப்படும் ஜோகூர் டாரூல் தாசிம் கால்பந்து கிளப்பின் முன்னாள் பயிற்றுனர் மரியோ கோமேஸ் தம் மீது தொடுக்கவுள்ள வழக்கை சந்திக்க தயார் என ஜோகூர் பட்டத்து இளவரசரும் , ஜே.டி.தி கால்பந்து கிளப்பின் உரிமையாளருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தம்மை நிறுத்துவதற்கு மரியோ கோமேஸ் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முகநூலில் வெளியிட்ட தனது பதிவில் , ” முயற்சியைத் தொடருங்கள் மரியோ, என்னை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள், நானும் இதுவரை நீதிமன்ற சூழலை எதிர்கொண்டதில்லை. நீதிமன்ற சூழல் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.டி.தி கால்பந்து கிளப்பில் தமக்கு சம்பளப் பாக்கி இருப்பதாகவும் அதனை பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மரியோ கோமேஸ் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமது வழக்கறிஞர் ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்திடம் இந்த வழக்கை தாக்கல் செய்யவிருப்பதாக மரியோ கோமேஸ் தெரிவித்துள்ளார்.