அண்மையச் செய்திகள்

துர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு

ஈப்போ, அக். 2
தனது காதலியை கொலை செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட என்.சந்திரசேகரனுக்கு (வயது 30) ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனையை விதித்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ சே ருசிமா கஸாலி இந்த தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதால் இத்தண்டனை விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 11.00 மணிக்கும் பிப்ரவரி 28ஆம் தேதி காலை 6.00 மணிக்கும் இடையே சிம்பாங் புலாயில் 17 வயது எஸ்.துர்க்காதேவியை கொலை செய்ததாக சந்திரசேகரன் குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார். இந்த வழக்கில் அரசு சார்பில் 12 சாட்சிகள் நிறுத்தப்பட்டனர். பிரதிவாதிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட 3 சாட்சிகள் சாட்சியமளித்தனர். அரசு தரப்பில் டிபிபி ஈர்வான் சுவாய் போன், ஹவ் மேய் லிங் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் ஆஜரானார்.

முன்னதாக தீர்ப்பளித்தபோது வழக்கு விவரங்களை குறிப்பிட்ட நீதிபதி எதிர்வாதம் செய்தபோது, சம்பவத் தினத்தன்று வீட்டிற்கு வந்த கொள்ளையன் துர்க்காதேவியை கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கூறியிருக்கின்றார் என குறிப்பிட்டார்.

ஆனால், இது கற்பனை கதை எனவும் தற்காப்புக்காக சொல்லப்பட்ட கதை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டினார். அதோடு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் 37 காயங்கள் இருந்துள்ளன. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கையில் மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி ரசாயன நிபுணர்கள் மரபணு சோதனை நடத்திய போது சம்பவம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மரபணுவும் கொலையுண்ட பெண்ணின் மரபணுவும் மட்டுமே இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதனிடையே துர்க்காதேவியை கொலை செய்த நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கின்றது என்று அவருடைய உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார்.