கோலாலம்பூர், ஜன.8-
நம்பிக்கைக் கூட்டணி அறிவித்துள்ள மறுசுழற்சி பிரதமர் வேட்பாளரை இளம் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தாம் கருதுவதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
ஆற்றல் கொண்ட பல இளம் தலைவர்கள் இருந்தும் வாக்குகளைப் பெறுவதற்காக அக்கூட்டணி துன் டாக்டர் மகாதீரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பதாக அவர் கூறினார்.
நம்பிக்கை கூட்டணி மறுசுழற்சி கூட்டணி என பலமுறை நான் கூறியிருக்கிறேன். காரணம், அம்னோவின் முன்னாள் தலைவர்களை அக்கூட்டணி மறுசுழற்சி செய்கின்றது. அதனால், அக்கூட்டணிக்காக பரிதாப்படுகின்றேன். நாடாளுமன்றத்தில் திறமையாக விவாதிக்ககூடிய இளம் தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ளதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், அவர்களையெல்லாம் ஏன் அக்கூட்டணி நிறுத்தவில்லை என்பது தனக்கு தெரியவில்லை என ஜாலான் அம்பாங்கிலுள்ள விஸ்மா அமானா ராயாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அசாலினா ஒத்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
14ஆவது பொதுத்தேர்தலில் அதிருப்தியான முடிவு கிடைத்தால் எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தைக் குறைச் சொல்லக்கூடாது. இது நம்பிக்கைக் கூட்டணியின் பிரச்னை. அவர்களால் வெல்ல முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால்தான், தலைமைத்துவத்தை மறுசுழற்சி செய்கின்றனர்.
மக்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல் மறுசுழற்சி வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியிருக்கும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு தந்திரங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நடப்பிலுள்ள தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் மறுசுழற்சி தலைவரை அவர்கள் வேட்பாளராக முன்னிறுத்துகின்றனர். மறுசுழற்சி தலைவரைப் பயன்படுத்தும்போதே நம்பிக்கைக் கூட்டணிக்கு நம்பிக்கை இல்லை என்பது பொருள்படுகின்றது.
தேசிய முன்னணி இளம் தலைமுறையின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. உதாரணமாக, எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தவிருக்கும் அவர்களுக்காக 2050 தேசிய உருமாற்றம் (டி.என்.50) ஏற்படுத்தி தந்துள்ளது. அதனால், மறுசுழற்சி தலைவரால் இளம் தலைமுறையினரைக் கவர முடியாது என தாம் கருதுவதாக டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் கூறினார்.

