கோலாலம்பூர், ஜன.8-
மாலத் தீவுக்கான (மால்டீவ்ஸ்) தனது பயணத்தை ஏர் ஆசியா எக்ஸ் அதிகரித்திருப்பதாக மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா அறிவித்துள்ளது.
கோலாலம்பூர்-மாலத் தீவுக்கான கூடுதல் பயணச் சேவையை ஏர்பஸ் ஏ330 ரக விமானத்தைப் பயன்படுத்தி வாரத்திற்கு 4 நாட்கள் என ஆண்டுக்கு 156,000 இருக்கைகளுடன் அடுத்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளும் என தனது அறிக்கையின் வாயிலாக அந்நிறுவனம் கூறியது.
இந்தக் கூடுதல் பயணச் சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு வரும் மே 6ஆம் தேதி வரையிலான ஒருவழிப் பயணத்திற்கு இப்போது தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை வரி உட்பட வெ.199 சலுகை விலை வழங்கப்படுகிறது.
ஏர் ஆசியா எக்ஸ் சேவை தொடங்கப்பட்டது முதல் கோலாலம்பூர்-மாலத் தீவுப் பயணச் சேவைக்கான கோரிக்கைகள் 130 விழுக்காடு அதிகரித்ததைத் தொடர்ந்து வாரத்திற்கு இப்போது 7 பயணச் சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் பேரி கிலிப் தெரிவித்தார்.
இதில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எங்களுக்கு இன்னும் கோரிக்கைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஏ330 ரக விமானத்தின் மிகப் பெரிய கொள்ளளவின் மூலம் நாங்கள் மாலத் தீவுக்கான சந்தை வாய்ப்பை இன்னும் தொடர முடியும் என்று ஓர் அறிக்கையில் பேரி கிலிப் குறிப்பிட்டார்.

