கோலாலம்பூர், ஜூலை.24 –
பெல்டா நில குடியேற்றத் திட்டக்காரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் எந்த நிதியை பயன்படுத்தும் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி சவால் விடுத்துள்ளார்.
குறிப்பாக நான்கு முக்கிய ஊக்குவிப்பு திட்டங்களுக்காக 142 கோடியே 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படடுள்ளது.எனினும் மத்திய அரசாங்கம், பெல்டா நிறுவனத்திடம் போதிய நிதி இல்லாத பட்சத்தில் எங்கிருந்து இந்த தொகைப் பெறப்படுகிறது என ரஃபிஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேசிய முன்னணியில் இனிப்பு வார்த்தைகளில் பெல்டா நில குடியேற்றக்காரர்கள் ஏமாந்து விடாமல் இருக்க எந்த நிதி பயன்படுத்தப்படுகிறது என்பதை நஜிப்பின் நிர்வாகம் அறிவிக்க வேண்டும் ” என ரஃபிஸி தெரிவித்துள்ளார்.
பெல்டாவின் வளர்ச்சிக்காக 6 ஊக்குவிப்புத் திட்டங்களைப் நஜீப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதில் கடனைச் செலுத்துதல், ஊக்குவிப்பு நிதியளித்தல், சிறப்பு நிதியத்தை அமைத்தல் மற்றும் வீட்டுடைமைத் திட்டமும் அடங்கும். குடியேற்றவாசிகளின் நலனை முன்னிட்டு வெ. 5,000லிருந்து வெ. 94,956 வரை ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
மொத்தம் வெ. 47.48 கோடி பெறுமான அத்திட்டங்கள் இவ்வாண்டு ஆகஸ்டு மாத இறுதியில் அமல்படுத்தப்படும் என பெல்டா குடியேற்றவாசிகளின் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவொன்றில் நஜீப் அதனை அறிவித்தார்.
