கோலாலம்பூர், ஜன. 10-
தென்னிந்தியாவின் நடிகர் நடிகைகளையும் உள்ளூர் கலைஞர்களையும் கொண்டு அண்மையில் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற நட்சத்திர விழா மாபெரும் வெற்றி விழாவாக அமைந்தது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியைப் பற்றி வேண்டுமென்றே சமூகவலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் சில குறிப்பிட்ட தரப்பினர்கள் பரப்பிவரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாமென அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மை இவன்ஸ் இண்டர்நேஷனல் உரிமையாளர் ஷாகுல் ஹமிட் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மை இவன்ஸ் இண்டர்நேஷனல் ஒருங்கிணைப்பில் நட்சத்திர விழா கடந்த சனிக்கிழமை 6ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது. ஆனால், சில தரப்பினர்கள் இந்நிகழ்ச்சிகளை குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளையே வெளியிட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு கூட்டம் குறைவாகவே இருந்ததாகவும், மலேசியா நடிகர் சங்கத்திற்கு அதிகமாக பணத்தை வாரி இறைத்திருப்பதாகவும் வெளிவந்த செய்திகள் மனதிற்கு வேதனையளிப்பதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை நான் முன்னிருந்து நடத்தினேன். எனக்குத் தெரியும் எவ்வளவு பார்வையாளர்கள் வந்திருந்தனர். மலேசியர்கள் இந்நிகழ்ச்சியை எப்படி கண்டு களித்தனர். அவர்களின் ஆதரவு எவ்வாறு இருந்தது என்பது எனக்கு தெரியும். அவ்வாறு இருந்தும் எதற்கு உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார். இது ஒருநாள் முழுவதும் நிகழ்ந்த நிகழ்ச்சி. காலை மணி 10.30 அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற தொடங்கியது. தங்களது அபிமான நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக அரங்கினுள் மலேசிய ரசிகர்கள் குவியத் தொடங்கினர். மாலை மணி 5.00க்கு மேல் அரங்கினுள் ரசிகர்களின் எண்ணிக்கை எங்களது எதிர்ப்பார்ப்பையும் மீறி அதிகரித்தது. ஆனால், சில தரப்பினர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு மலேசியர்கள் இவ்விழாவைப் புறக்கணித்துவிட்டதாக கூறி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடந்ததற்கு முக்கிய காரணம் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் ஆதரவும்தான். இந்தக் கலைநிகழ்ச்சியின் மூலம் நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. எனவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். சுமார் 37,000 பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்ட கலைவிழா ஒரு நாள் முழுவதும் இடைவிடாமல் நடைபெற்றதைத் தொடர்ந்து மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நாங்கள் நடத்தியிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். ஜாம்பவான்கள் ரஜினிகாந்தும் கமலஹாசனும் எங்களை பாராட்டியிருக்கின்றனர். இது எங்களுக்கு ஆத்ம திருப்தியை அளித்திருக்கிறது என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் தெரிவித்தார். ஒவ்வொரு நல்ல செயல்கள் நடக்கும்போது அதற்கு எதிராக தீய செயல்கள் நடப்பது வழக்கம். அதுபோன்றுதான் இந்த நட்சத்திர கலை விழாவிற்கும் சில தரப்பினர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என அவர் சொன்னார்.
மேலும், சில கலைஞர்களுக்கு அழைப்பிதழே கொடுக்கவில்லை என தகவலும் கசிந்தது. தென்னிந்திய நடிகர் சங்கம் அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பிதழை கொடுத்தது. நிகழ்ச்சிக்கு யாரையும் வற்புறுத்தி வரவேற்க முடியாது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். சில நடிகர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று என விஷால் விளக்கமளித்தார். மேலும், இந்தக் கலைநிகழ்ச்சிக்கு மலேசிய கலைஞர்களின் பங்களிப்பும் ஆதரவும் அதிகமாகவே இருந்தது. மலேசியா இந்தியாவிற்கு இடையே உள்ள கலாச்சார பண்புகளை தக்க வைக்கும் வகையில் இந்நிகழ்சியில் மலேசிய கலைஞர்களும் தங்களது படைப்புகளை வழங்கியிருந்தனர் என அவர் கூறினார்.
மலேசிய கலைஞர்களுக்கு நிதியுதவி!
மலேசிய இந்திய கலை இயக்கங்களின் பேரவைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெ.1 லட்சம் மாணியம் வழங்கியது. அதனை, அச்சங்கத்தின் தலைவர் விஜயிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி!
இந்நிகழ்ச்சியில் கபாலி படத்தை மலேசியாவில் வெளியிட்ட டத்தோ மாலிக் தனது மாலிக் ஸ்ட்ரிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் 50 ஆயிரம் வெள்ளியை தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கினார்.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த விழா உள்ளூர் கலைஞர்களுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. உள்ளூர் ரசிகர்களின் கண்களுக்கு வெறும் விருந்தை மட்டும் வழங்காமல் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளும் இதில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை முழுவதுமாக பதிவு செய்த அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சன் டிவி வரும் பொங்கலுக்கு அதனை ஒளிப்பரப்பவுள்ளது. இதன் வாயிலாக, அனைத்துலக அளவில் மலேசிய கலைஞர்களின் படைப்புகள் செல்லவிருப்பது நமக்கு பெருமையே.
காலை 11.00 மணியளவில் தொடங்கிய விழா நள்ளிரவு வரை நீடித்தது. தங்களது அபிமான நட்சத்திரங்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டதையும், விருப்பமான பாடலுக்கு நடனமாடியதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சி தொடங்கி சில மணி நேரத்தில் உச்ச நட்சத்திரங்களாக திகளும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஹெலிகாப்டர் மூலம் அரங்கில் வந்திறங்கியதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதுவரை இம்மாதிரியான பிரமாண்டமான நிகழ்ச்சி இங்கு நடந்தேறியதில்லை என பார்வையாளர்கள் மனதில் பதியும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள் என அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

