கோலாலம்பூர், ஜன.10-
சமீப காலமாக சில நாளேடுகளில் தமிழ்ப்பள்ளி கட்டட நிர்மானிப்புகள் குறித்து எனக்கு எதிராக செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வருத்தம் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான திட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் தீர்வுக்கண்டு வருவதோடு கட்டட நிர்மானிப்பு வேலைகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2012ஆம் ஆண்டு சுமார் 39 தமிழ்ப்பள்ளிகளின் இணைக்கட்டடம் மற்றும் மறுசீரமைப்பிற்காக நிதிகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அப்போதைய ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் தலைமையில் ஒதுக்கீடு செய்தார். அதற்கான குத்தகைகளும் இந்திய குத்தகையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் 2013ஆம் ஆண்டில்தான் துணைக்கல்வியமைச்சராக பொறுப்பேற்றேன். ஆனால், அப்போதுதான், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கட்டட நிர்மானிப்பு வேலைகள் தொடங்கப்படாதது தெரிய வந்தது. இதற்கான காரணங்களை தாம் முதலில் ஆராய்ந்ததாக கமலநாதன் சொன்னார்.
தோட்டப்புறத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கத்தின் பகுதி உதவிகள் பெறும் பள்ளிகளாகும். சில பள்ளிகளில் வாரியம் (எல்.பி.எஸ்) இல்லை. சில பள்ளிகளில் நிலப்பிரச்னைகள் உள்ளது. சில பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அவற்றுக்கு என் அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்ததோடு பள்ளி நிர்மானிப்பு பணிகளும் விரைவுபடுத்தப்பட்டது.
இருந்தும் தாமதம் ஏன்?
இந்திய குத்தகையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இப்போதுதான் புதிய அனுபவமாக உள்ளது. அரசாங்கம் சார்ந்த குத்தகைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொண்டு வருவதோடு பள்ளிக் கட்டட வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், முக்கிய ஆவணங்களை அவர்கள் தயார்ப்படுத்துவதில் தாமதங்கள் நிகழ்ந்தது.
அதுமட்டுமின்றி, சில பள்ளிகளில் நிலப்பிரச்னைகள் இருந்ததாலும் அவற்றிற்கு தீர்வு கண்டால்தான் கட்டட வேலைகள் தொடங்கும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களிலுள்ள மந்திரி பெசார்கள், ஊராட்சித்துறை அதிகாரிகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வும் கண்டும் வருகிறோம். இன்னும், சில பள்ளிகளில் இணைக்கட்டடம், மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் இதர வேலைகளான தண்ணீர் குழாய், மின்சார வசதி, சாலை வசதி முதலானவை ஏற்படுத்தி தர வேண்டிய நிலை இருந்தது. இவையனைத்தும் பிரதமர் நஜீப் 2012இல் வழங்கிய நிதியில் உள்ளடங்கவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் குத்தகையாளர்கள், பள்ளி வாரியங்கள் எங்களை அணுகிய போது அதற்கும் கூடுதல் நிதியைப் பெற்றுத் தந்தோம்.
குத்தகையாளர்கள், கட்டட ஆலோசகர்களிடையே பிரச்னை!
சில பள்ளிகளில் பெரும்பகுதி வேலைகள் முடிந்த நிலையில் குத்தகையாளர்கள், கட்டட ஆலோசகர்களிடையே பிரச்னைகளும் ஏற்பட்டதால் வேலைகள் தாமதமாகின. சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் கட்டட ஆலோசகர்களை நீக்கும்படி எல்லாம் கூறினர். சம்பந்தப்பட்ட கட்டட ஆலோசகர்களை நீக்கி புதியவர்களை நியமித்தால் பள்ளி கட்டுமான செலவு மேலும் அதிகரிக்கும். இதனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது!
உண்மையை சொன்னால் துரோகி!
அரசாங்கம் இப்போதுதான் இந்திய குத்தகையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றது. இதில், அவர்களிடையே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதை நான் கூறினால் அடுத்தமுறை அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? இந்தியர்களுக்கான இந்த வாய்ப்பு மீண்டும் இல்லாமல் போனால் என்னைத்தான் துரோகி என சிலர் கூறுவார்கள். இப்பொழுதே, அமைச்சில் சில அதிகாரிகள் பொது குத்தகையில் தமிழ்ப்பள்ளி கட்டுமான பணிகளை ஒப்படைக்கலாம் என வலியுறுத்துகின்றனர். அப்படி, பொது குத்தகையில் விட்டால் இந்தியர்களால் மற்ற இனங்களைச் சார்ந்த குத்தகையாளர்களிடமிருந்து வாய்ப்புகளைப் பெற முடியுமா?
அதனால், முடிந்தவரையில் அவர்களை சமாதானப்படுத்தி தீர்வு கண்டேன். என்னுடைய பணிகள் முடிந்துவிட்டாலும் தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்காக களத்தில் இறங்கி அதிகமாகவே வேலை செய்து வருகிறேன். சில நாளேடுகளில் இதுவெல்லாம் தெரியாமல் எனக்கெதிராக செய்தி வெளியிடுகின்றனர். இதற்கெல்லாம், முறையான பதிலைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு குத்தகையாளர்களுக்கு உள்ளது.
ஆனால், பெரும்பாலானோர் மௌனம் காத்து வருவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள்தான் உண்மையிலேயே பள்ளி கட்டட நிர்மானிப்பு தாமதத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். இனிவரும், காலங்களிலாவது கொடுப்பார்களா? என்று பார்ப்போம். நெகிரி செம்பிலானில் ரீஜண்ட் தமிழ்ப்பள்ளி, கூனூங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி, புளுவேலி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றது.
நான் இதுவரை ஒன்றும் செய்யவில்லையா?
நான் துணைக்கல்வி அமைச்சராக வந்ததிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் கட்டுமான பணிகளைத் தீவிரப்படுத்தி வந்துள்ளேன். ஜொகூரில் லாடாங் கெலான், லாடாங் புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளிகள், நெகிரி செம்பிலானில் லாடாங் கெய்ரோ, லாடாங் ஷாங்காய், ஆயர் ஹீத்தாம் ஆகிய தமிழ்ப்பள்ளிகள், பினாங்கில் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, கெடாவில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, பேராக்கில் தாமான் டேசா தமிழ்ப்பள்ளி, சிலாங்கூரில் சுங்கை ரெங்கம், லாடாங் களும்பாங் தமிழ்ப்பள்ளிகள், மலாக்காவில் ரும்பியா தமிழ்ப்பள்ளி முதலான தமிழ்ப்பள்ளிகளில் கட்டுமான பணிகள் முடிந்து அங்கீகார சான்றிதழைப் பெற்று செயல்பட்டு வருகின்றன. சில பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டு அந்த சான்றிதழுக்காக காத்திருக்கின்றன.
சில பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அதன் அடிப்படையில் பாதுகாப்பு அம்சங்களுடனும் தீயணைப்பு, ஊராட்சித்துறை அனுமதி உள்ளிட்டவைகளின் சான்றிதழ்களுடன் தமிழ்ப்பள்ளிகளின் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். தாமதமானாலும், சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் கட்டிமுடிக்கப்படும் என டத்தோ ப.கமலநாதன் உறுதியளித்தார்.

