மிலான், ஜன.10 –
மென்செஸ்டர் சிட்டி , இண்டர் மிலான் கிளப்புகளின் முன்னாள் நிர்வாகியான ரோபேர்ட்டோ மன்சினி, இத்தாலி தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். ரோபேர்ட்டோ மன்சினி தற்போது ரஷ்ய லீக்கில் விளையாடும் செயின்ட் பீட்டர்ஸ்பெக் அணியின் பயிற்றுனராக செயல்படுகிறார்.
மன்சினியைத் தவிர்த்து செல்சியின் நடப்பு நிர்வாகி அந்தோனியோ கொந்தே, பாயேர்ன் மூனிக்கின் முன்னாள் பயிற்றுனர் கார்லோ அன்செலோட்டியும் , இத்தாலி கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்புக்கு இணைத்து பேசப்படுகின்றனர். 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டதை அடுத்து வென்டூரா பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தாலி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் தோல்வி கண்டுள்ளது. இத்தாலி கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கார்லோ தாவேச்சியோவும் விலகி இருப்பதை அடுத்து இத்தாலி தேசிய கால்பந்து அணி மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது.இத்தாலி கால்பந்து சங்கத்தின் புதிய தலைவர் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் பயிற்றுனர் பொறுப்பு குறித்து ஆலோசிக்கலாம் என மன்சினி கூறினார்.

