Site icon அநேகன்

இன்று விதைத்தால்தான் நாளை அறுவடை

ரவாங், ஜூலை 24-

தன்னார்வப் பணிகளின் மூலம் சுற்றுவட்டார மக்களுக்குத் தங்களால் இயன்ற சமூக சேவைதனை ஆற்றி வரும் மேடான் பத்துகேவ்ஸ் இளைஞர் இயக்கம் இன்று விதைத்தால்தான் நாளை அறுவடை எனும் கல்விக் கருத்தரங்கை ஏற்று நடத்தியது.  கல்வி ஒன்றே நம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் திறவுகோல். அத்தகைய கல்வியை நாம் கருதி கற்றால் வாழ்வில் எதிர்ப்பார்த்த இலக்கை அடையலாம். விடாமுயற்சியையும் முடியும் என்ற நம்பிக்கையையும் கைவிடாமல் கல்வி கற்கும் மாணவர்களே நாளைய சரித்திரத்தின் சுவடுகளாகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை சுங்கை சோ தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த 5 மற்றும் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குடன் கூடிய தன்முனைப்பு முகாமிற்கு கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலந்தான் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.  அத்தகைய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்விக் கருத்தரங்கம் மூலம் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய மேடான் பத்து கேவ்ஸ் இளைஞர் இயக்கத்துக்கு நான் எனது நெஞ்சார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி இவர்கள் கல்வியில் கொண்ட இந்த தொடர் சேவைக்கு தம்மால் ஆன முழு ஒத்துழைப்பையும் தருவதாக டத்தோ கமலநாதன் உறுதி கூறினார்.

இதற்கு முன்னர் இயக்கத்தின் மூலமாக நாங்கள் பலதரப்பட்ட சமூக சேவைகளை மக்களுக்கு அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்துக்கு வழங்கியுள்ளோம். கல்வி தொடர்பான சேவையில் இதுவே எங்களின் முதல் முயற்சியாகும். எங்களின் இந்த முயற்சிக்கு சங்கத்தின் கல்விப் பிரிவுத் தலைவர் சுரேந்திரன் பன்னீர் செல்வம் பேராதரவு வழங்கினார் என அச்சங்கத்தின் தலைவர் ஜோன் வனத்தையம் தெரிவித்தார்.

வெறும் கல்விக் கருத்தரங்காக மட்டும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலும் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையிலும் குற்றவியல் நிபுணர் டாக்டர் முகமட் ரஹிம் மற்றும் குருஷேரன் சிங் இருவரும் சுவாரசியமாக உரையாற்றினர். இது மாணவர்களை மட்டுமின்றி நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களையும் கவர்ந்தது என்றார் அவர்.

மேலும் இந்த நிகழ்வில் யூபிஎஸ்ஆர் மாதிரி கேள்வித் தாள்கள் அடங்கிய புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முதல்கட்டமாக இந்தப் புத்தகம் சுங்கை சோ தமிழ்ப்பள்ளிக்கும் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளிக்கும் வழங்கப்பட்டது. பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர்களான திருமதி ஜெயந்தியும் திருமதி மஹாதேவியும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இருபள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களான முருகேசன், லெட்சுமணன், ஐபிடி உலுசிலாங்கூரைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோபி, டத்தோ பி.எஸ்.சாமி ஆகியோரும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர். மாணவர்கள், பெற்றோர்கள் என 200க்கும் மேலானவர்கள் இந்நிகழ்வில் கலந்து ஆதரவு நல்கியதாக ஜோன் வனத்தையம் தெரிவித்தார்.

Exit mobile version