மென்செஸ்டர், ஜன.10 –
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2 – 1 என்ற கோல்களில் பிரிஸ்டல் சிட்டியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோ போட்ட கோல், மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது.
காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்திய பிரிஸ்டல் சிட்டி , மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் எத்திஹாட் அரங்கில் களமிறங்கியது. 29 ஆண்டுகளில் முதல் முறையாக மிகப் பெரிய கால்பந்து போட்டி ஒன்றின் அரையிறுதி சுற்றில் களமிறங்கிய பிரிஸ்டல் சிட்டி, மென்செஸ்டர் சிட்டியை கண்டு அஞ்சிடாமல் சற்றும் சளைக்காமல் விளையாடியது.
43 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் மூலம் முதல் கோலைப் போட்ட பிரிஸ்டல் சிட்டி, மென்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் கேவின் டி புரூன் அடித்த கோலின் வழி மென்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது.
ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், செர்ஜியோ அகுவேரோ போட்ட கோல், மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது. இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

