Site icon அநேகன்

ஜொகூரில் சின்ன கருப்பர் ஆலயம் உடைப்பு; பக்தர்கள் மனக்குமுறல்!

ஜொகூர், ஜன.11-
ஜொகூர், செரி அலாமிலுள்ள சின்ன கருப்பர் ஆலயம் அமலாக்கத் தரப்பினர்களால் இன்று உடைக்கப்பட்டதாக வாட்சாப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த ஆலயத்தை உடைப்பதற்கு 13ஆம் தேதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடிரென வந்த அமலாக்கத் தரப்பினர்கள் அந்த ஆலயத்தின் நிர்வாகம், பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி உடைத்து சென்றதாக வாட்சாப்பில் பரவும் ஓர் ஒலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமயத்தின் அடிப்படையில் ஓர் ஆலயத்திலிருந்து சிலைகளையோ அல்லது ஆலயத்தையோ வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் போது அதற்காக சில வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், அத்தகைய சடங்குகளை செய்வதற்கு வழிவிடாமல் அமலாக்கத் தரப்பினர் இந்துக்களின் மனவுணர்வுக்கு மதிப்பளிக்காமல் ஆலயத்தையும் அங்குள்ள தெய்வங்களின் சிலைகளையும் உடைத்துள்ளதாக அதிருப்திக்குள்ளான சிலர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியின் கீழ் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் சில ஆலயங்கள் உடைக்கப்படவிருந்த நிலையில் மாநில ஆட்சிக்கு எதிராக ம.இ.கா.வினர் உள்பட பொது இயக்கங்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஆனால், இம்முறை தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜொகூர் மாநிலத்தில் ஓர் இந்து ஆலயம் இப்படி உடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version