புத்ராஜெயா, ஜன.11-
செராஸிலுள்ள மறுவாழ்வு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கு முன்னாள் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் சிறைத்துறையிடம் விண்ணப்பம் ஏதும் செய்யாததால் நேற்று அன்வாரைச் சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சிறைத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி ஒமார் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சின் உத்தரவினால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் மகாதீர் குற்றம் சாட்டியதையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். சிறைத்துறையும் சுங்கை பூலோ சிறைச்சாலையும் அன்வாரைச் சந்திப்பதற்கு துன் மகாதீரிடமிருந்து எவ்வித கோரிக்கை விண்ணப்பத்தையும் பெறவில்லை. அப்படி அவர் வழங்கியிருந்தால் அதனை நாங்கள் பரிசீலணைச் செய்திருப்போம்.
அன்வாரைச் சந்திக்க முடியாததற்கான முடிவு சிறைச்சாலையிடமிருந்து வந்தது. துணைப்பிரதமரிடமிருந்து அல்ல என இன்று உள்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி ஒமார் கூறினார்.
நேற்று துன் டாக்டர் மகாதீர், உள்துறை அமைச்சின் உத்தரவினால் அன்வாரை சந்திப்பதற்கு சிறைத்துறை தனக்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். அவர்கள் காரணங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலிடத்திலிருந்து ஒருவர் அன்வாரை தாம் சந்திப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.
நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தையை எளிமைப்படுத்தியதற்காக அன்வாருக்கு நன்றி தெரிவிப்பதற்காக தாம் அன்வாரைச் சந்திக்கச் சென்றதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.
இதனிடையே, சூல்கிப்ளி கூறுகையில், சிறைக்கு வெளியில் இருந்தாலும் ஒரு கைதி 1995ஆம் ஆண்டு சிறைத்துறை சட்டவிதியின் செக்ஷன் 26 விதிமுறைக்கு உட்பட்டிருப்பதாக கூறினார்.
சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் சிறைக்கு வெளியில் இருந்தாலும் ஒரு கைதி சிறையில் இருப்பதாக கருதப்படுவார். அதோடு, சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சிறையின் ஜெனரல் கமிஷனரின் உத்தரவுகள் ஆகியவற்றிற்கு அவர் உட்பட்டிருக்கிறார் என சுல்கிப்ளி குறிப்பிட்டார்.

