லண்டன், ஜூலை.25 –
அடுத்த மாதம் மசிடோனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சூப்பர் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாட மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் பெய்லிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டும், யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் யுனைடெட்டும் இந்த ஆட்டத்தில் களம் காணவிருக்கின்றன.
கடந்த மே மாதம் நடைபெற்ற யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்தா வீகோ அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின்போது எரிக் பெய்லிக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இதனால் இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெய்லி இழந்தார்.
இந்நிலையில் எரிக் பெய்லிக்கு மூன்று ஆட்டங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருப்பதை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் மறு உறுதி செய்துள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஐரோப்பிய சூப்பர் கிண்ணப் போட்டியிலும் விளையாட முடியாத பெய்லி, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணப் போட்டியின் குழுப் பிரிவுக்கான முதல் ஆட்டத்திலும் விளையாட முடியாது.
