Site icon அநேகன்

900 இந்திய மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உபகார சம்பளம்

கோலாலம்பூர், ஜுலை 25–

ம.இ.கா தேசிய தலைவர் உபகார சம்பள திட்டத்தின் கீழ் மாதம் 3 ஆயிரத்து 855 ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களை சேர்ந்த 900 இந்திய மாணவர்களுக்கு உபகார சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.

18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்த உபகார சம்பள திட்டத்தை ம.இ.கா. கல்வி பிரிவு மேற்கொள்வதாக கட்சியின் தேசிய தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் திறன் துறைகளில், டிப்ளோமா, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவிருப்போருக்கு இந்த உபகார சம்பளம் வழங்கப்படுகிறது.

மலேசிய இந்திய செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை விளங்குகிறது. கல்வி அறிவாற்றல் மிக்க இந்திய சமூகத்தை உருவாக்கும் மறுசீரமைப்பு முயற்சியாகவும், இந்திய இளையோருக்கு மேற்கல்வி தொடரும் வாய்ப்பு வழங்கும் வகையிலும் இத்திட்டம் அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது.

நாட்டில் செயல்படும் 18 பிரபல தனியார் உயர்கல்விக் கழகங்களின் கூட்டு முயற்சியில் ம.இ.கா. இத்திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறது.பிரிக்பீல்ஸ்ட் ஆசியா கல்லூரி, யூ.சி.எஸ்.ஐ. பல்கலைக்கழகம், லிம் கோக் வெங் தொழில்நுட்ப படைப்பாற்றல் பல்கலைக்கழகம் ஆகியன அத்திட்டத்தில் பங்கேற்கவிருக்கும் சில உயர்கல்விக் கூடங்கள் ஆகும்.

கல்வியை மேற்கொள்ள ஆர்வம் இருந்தும் நிதி பற்றாக்குறையை கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உபகார சம்பள திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான மேல் விவரங்களுக்கு ம.இ.கா. கல்விப் பிரிவின் உதவியை மக்கள் நாடலாம்.

Exit mobile version