மாட்ரிட், ஜூலை 25-
பிரான்ஸ் மொனாகோ அணியின் இளம் தாக்குதல் ஆட்டக்காரரான கைலியன் மெபப்பேவை பெறுவதற்கு ரியல் மாட்ரிட் தயாராகிவிட்டது. 18 வயதான அந்த இளம் ஆட்டக்காரருக்கு 160 மில்லியன் பவுன் தொகையையும் வழங்குவதற்கு அவ்வணி முன்வந்திருப்பதாக டெய்லி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரியல் மாட்ரிட் அணி ஜேம்ஸ் ரொட்ரிகேஸை ஜெர்மனியின் பாயேர்ன் முனீச் அணிக்கு இரவலாக அனுப்பிவிட்டது. அதோடு முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான அல்வாரோ மோராத்தாவை செல்சீக்கு விற்றுவிட்டது. இந்நிலையில் புதிய தாக்குதல் ஆட்டக்காரருக்கு ரியல் மாட்ரிட் குறி வைத்துள்ளது.
அதனால் கைலியன் மெபப்பேவை பெறும் முயற்சியில் அவ்வணி இறங்கியுள்ளது. ஆனால் இப்போது கைலியன் மெபப்பேவை மொனாகோ அணியை விட்டு வெளியேறுவது சரியாக இருக்காது என கால்பந்து வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி கைலியன் மெபப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தால் முன்னணி ஆட்டக்காரர்கள் வரிசையில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பருவத்தில் ஜுவண்டெஸ் அணியிலிருந்து பௌல் பொக்பாவை பெறுவதற்கு மன்செஸ்டர் யுனைடெட் 89 மில்லியன் பவுன் தொகையை செலுத்தியது. இதுநாள் வரை பௌல் பொக்பாதான் கால்பந்து வரலாற்றில் அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆட்டக்காரர் என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளார். அதை கைலியன் மெபப்பே மாற்றி அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே கடந்த பருவத்தில் மொனாகோ அணியை பிரதிநிதித்து 44 ஆட்டங்களில் களமிறங்கிய கைலியன் மெபப்பே 26 கோல்களை புகுத்தியுள்ளார்.
