Site icon அநேகன்

அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டத்தால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது!

கோலாலம்பூர், ஜூலை 27
நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொறுப்பேற்றதற்கு பிறகு நாட்டில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு அமல்படுத்திய உருமாற்றத் திட்டத்தின் வாயிலாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்தாலும், நாட்டு மக்களின் குறைகூறல்கள் குறையவில்லை. நாட்டில் குற்றச்செயல்கள் சிறிதும் குறையவில்லை என்று நாட்டு மக்கள் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமல்படுத்திய தேசிய உருமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நாட்டில் குற்றச்செயல்கள் 47 விழுக்காடு குறைந்துள்ளது.
எனினும், போலீசார் குற்றச்செயல் விழுக்காட்டை பெரிதாகக் கருதாமல் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். கடமையாற்றுவதில் போலீசார் கண்டிப்புடன் இருந்தாலும் பொதுமக்களுடன் அவசியம் புன்னகைப் புரிய வேண்டும் என பிரதமர்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாதுகாப்பு மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுமக்களின் உதவியுடன் போலீசார் நாட்டு மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். சீருடை அணிந்த அரசாங்க நிறுவனம் பொதுமக்களுடன் நெருக்கமுடன் இருந்தால் மக்களிடையே நற்பெயரையே வாங்கிக் கொடுக்கும் என்றார். ஆசியானில் குற்றச்செயல்களைக் குறைக்கும் ஒரு நாடாக மலேசியா விளங்க வேண்டும் என போலீஸ் படையினர் பொறுப்புணர்வுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் சொன்னார்.
இதுதான் உண்மை. ஆனால், நாட்டு மக்கள் போலீசார் மீது இன்னும் முழு நம்பிக்கை வைக்கவில்லை என்ற அவர், இதனை மாற்றுவதற்கான முயற்சியில் போலீசார் படையினர் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version