Site icon அநேகன்

சாம்பியன்ஸ் லீக் – மீண்டும் காலிறுதியில் ரியல் மாட்ரிட்

பாரிஸ், மார்ச் 7 –
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் மீண்டும் காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
செவ்வாய்கிழமை நடந்த இரண்டாவது சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், 2 – 1 என்ற கோல்களில் பி.எஸ்.ஜி எனப்படும்  பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. மூன்று வாரங்களுக்கு முன்னர் முதல் கட்ட ஆட்டத்தில் 3 – 1 என்ற கோல்களில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட், 5 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
தொடர்ந்து எட்டாவது முறையாக ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றுள்ளது. கடந்த ஏழு முறை ரியல் மாட்ரிட் காலிறுதி சுற்றிலும் வெற்றியைப் பதித்து அரையிறுதிக்கு தேர்வானது. செவ்வாய்கிழமை பாரிசில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டின் இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், காஸ்மிரோவும் போட்டனர்.
முதல் பாதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டின் முதல் கோலை ரொனால்டோ போட்டார். அந்த கோலானது சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரொனால்டோ போட்டிருக்கும் 117 ஆவது கோலாகும். முன்னணி நட்சத்திரம் நெய்மார் இன்றி களமிறங்கிய பி.எஸ்.ஜி  இரண்டாம் பாதியில் எடின்சன் கவானி போட்ட கோலின் வழி  ஆட்டத்தை சமப்படுத்தியது. 66 ஆவது நிமிடத்தில் பி.எஸ்.ஜி ஆட்டக்காரர் மார்க்கோ வெராட்டி சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இதனால் அந்த அணி 10 ஆட்டக்காரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட ரியல் மாட்ரிட் 80 ஆவது நிமிடத்தில் தனது வெற்றி கோலைப் போட்டது.ஸ்பெயின் லா லீகா போட்டியில் பின்னடைவை சந்தித்தாலும் ரியல் மாட்ரிட், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ந்து அதிரடி படைக்கிறது.
Exit mobile version