Site icon அநேகன்

புல் வெட்டும் இயந்திரத்தினால் மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு; விசாரணைக்கு பிறகு வழங்கப்படும்!

கோலாலம்பூர், மார்ச் 7-
கெமாஸிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் புல் வெட்டும் இயந்திரத்தின் கத்தி பட்டு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் எவ்வளவு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பது போலீசின் விசாரணைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இரண்டாவது துணைக்கல்வியமைச்சர் டத்தோ சோங் சின் வூன் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் பொறுப்பா அல்லது இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

இது தற்போது போலீசின் நடவடிக்கையின் கீழ் உள்ளது. விசாரணை முடிந்த பிறகுதான் யார் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு என்பது தெரியவரும். அதனால், போலீஸ் தரப்பு பதிலாக நான் பதில் கொடுக்க முடியாது என இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பில் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லோக் சியூ ஃபூக் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ சோங் சின் வூன் சொன்னார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி தனது அமைச்சின் தக்காவுல் காப்புறுதி இழப்பீட்டின் வாயிலாக 5,500 வெள்ளி அம்மாணவியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து பள்ளிகளின் நிர்வாகத்திற்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி நினைவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் புல் வெட்டுதல் உள்பட அனைத்து விதமான சீரமைப்பு பணிகள் பள்ளி நேரத்திற்கு முன்பும் பின்பும் மாணவர்கள் இல்லாத நிலையில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவதாக டத்தோ சோங் சின் வூன் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 13ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியில் புல்லை வெட்டும் இயந்திரத்திலிருந்து பறந்து வந்த கத்தி தலை மீது பாய்ந்ததில் 2ஆம் படிவ மாணவியான நூர் அஃபினி ரோஸ்லான் (வயது 14) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 ஆண் மாணவர்கள் காயங்களுக்கு இலக்காகினர்.

Exit mobile version