Site icon அநேகன்

ஆர்சன் வெங்கருக்குப் பதில் யோக்கிம் லோவ் ???!

லண்டன், மார்ச்.8 –

அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகிக் கொள்ளும் பட்சத்தில் ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்றுனர் யோக்கிம் லோவ்வை நிர்வாகியாக கொண்டு வர அர்செனல் கிளப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பருவத்தில அர்செனல் கிளப்புடன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அண்மைய வாரங்களில் அர்செனல் அணி சந்தித்து வரும் தோல்விகள் ஆர்சன் வெங்கரின் நிர்வாகி பொறுப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்செனல் கிளப்பை தம்மால் தொடர்ந்து வழி நடத்த முடியும் என ஆர்சன் வெங்கர் கூறி வந்தாலும் அந்த அணியில் உள்ள பெரும்பாலான ஆட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்சன் வெங்கர் நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகினால் அவரின் இடத்தில் யோக்கிம் லோவ்வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எ.எஸ் மொனாக்கோவின் லினார்டோ ஜார்டிம், செல்டிக் கிளப்பின் பிரென்டன் ரோஜார்ஸ் ஆகியோரின் பெயர்கள் இணைத்து பேசப்பட்டாலும், 58 வயதுடைய லோவ் மீது அர்செனல் கவனம் செலுத்தி வருகிறது.

2020 ஆம் ஆண்டு வரை ஜெர்மனி கால்பந்து அணியுடன் யோக்கிம் லோவ் ஒப்பந்தம் கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் ஜெர்மனி பயிற்றுனர் பொறுப்பை ஏற்ற யோக்கிம் லோவ், 2014 ஆம் ஆண்டில் அந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஜெர்மனி அணியில் பல உச்ச நட்சத்திரங்களை கையாள்வதில் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள யோக்கிம் லோவ், அர்செனலுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது.

Exit mobile version