கோலாலம்பூர், மார்ச். 8 –
தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர், டான் ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம்மின் பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். அவருடைய பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் மாமன்னரின் உறுதி கடிதத்திற்காக தாங்கள் காத்து கொண்டிருப்பதாக அஹ்மாட் சாஹிட் கூறினார்.
2014 ஆம் ஆண்டில் டிசம்பர் முதல் தேதி தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்ற நூர் ரஷிட், வரும் மார்ச் 17 ஆம் தேதியோடு 60 வயதில் கட்டாய ஓய்வு பெறவிருக்கிறார். இந்நிலையில் அவரின் பதவி ஓய்வை மேலும் ஓராண்டுக்கு ஒத்தி வைக்க உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
உள்துறை அமைச்சின் சிறந்த பணியாளர்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஹ்மாட் சாஹிட் இவ்வாறு தெரிவித்தார்.
புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்ற செயல் விசாரணைத் துறையின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றிய நூர் ரஷிட், டத்தோஸ்ரீ பக்ரி சீனிடம் இருந்து துணைத் தலைவர் பதவியை ஏற்றார்.

