Site icon அநேகன்

மலேசியாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா; வெற்றிப்பட நிறுவனமான டி.எம்.ஒய் வெளியிடுகிறது!

கோலாலம்பூர், மார்ச் 8-
குலேபகாவலி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், நாச்சியார் போன்ற பல வெற்றி படங்களை மலேசியாவில் வெளியிட்ட டி.எம்.ஒய். நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காலா திரைப்படத்தையும் வெளியிடவுள்ளது.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷிண்டே முதலானோரும் நடித்துள்ள காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று தலைநகரிலுள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்ற காலா திரைப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட டி.எம்.ஒய். நிறுவனத்தின் உரிமையாளரான டத்தோ முஹம்மட் யூசோப், ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுவதாகவும் மலேசியாவில் சுமார் 250க்கும் மேலான திரையரங்குகளில் தனது நிறுவனம் வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், டி.எம்.ஒய் நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டு முதன் முதலில் இப்படை வெல்லும் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் தற்போது காலா திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் உருவாகும் தரமான திரைப்படங்களை இங்கு வெளியிட வேண்டும் என்ற நோக்கில் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். தமிழ் மட்டுமின்றி, நேப்பாளம், வங்காளதேசம் ஆகிய மொழிகளிலும் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். இதுவரையில் அனைத்து படங்களுக்கும் நல்லதொரு வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகையா?

காலா திரைப்படத்தின் வெளியீட்டிற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மலேசியாவிற்கு வருவதற்கு வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் வினவிய போது, அவர் குறுகிய காலத்தில் கபாலி படப்பிடிப்பு, நட்சத்திர விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்காக மலேசியாவிற்கு வந்து விட்டதால் இப்படத்தின் வெளியீட்டிற்கு வர வாய்ப்பில்லை. ஆயினும், அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தின் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் பெற்றிருப்பதால் அப்படத்திற்காக அவரை மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என டத்தோ முஹம்மட் யூசோப் கூறினார்.

 

தலைவரின் படத்தில் இரண்டாம் முறையாக பாடுவது பெருமையளிக்கிறது! யோகி பி.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டிருக்கும் பிரபல ஹிப் பாப் பாடகர் யோகி பி, எந்திரனுக்கு பிறகு காலாவில் தலைவர் ரஜினிகாந்திற்கு பாடுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை தனித்துவமானது. அவரது பல பாடல்களை கேட்டு ரசித்துள்ளேன். அண்மையில் என்னை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர் எனது பாடல்களைப் பாராட்டியதோடு தனது இசையில் பாடும்படி கேட்டுக்கொண்டார். பிறகுதான் தெரிந்தது. அவர் அழைத்தது காலா படத்தின் பாடலுக்கென்று. மறுநாள் உடனடியாக சென்னை புறப்பட்டு அவரது ஸ்டூடியோவிற்கு சென்றேன். அங்கு விருந்தோம்பலுக்கு பின்னர் சந்தோஷ் நாராயணனும் இயக்குநர் ரஞ்சித்தும் காலா படத்தின் கதைக் குறித்து எனக்கு விளக்கினர்.

தற்போது, மீண்டும் சென்னைக்கு சென்று காலாவின் டீசரில் வந்திருக்கும் பாடலை முழுமையாக பாடவிருக்கின்றேன். தலைவர் ரஜினி எனக்கு பிடித்தது போல் பழைய தோற்றத்தில் இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இப்படம் மிகப் பெரிய வெற்றியை அடையும் எனவும் யோகி பி கூறினார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் காலா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரஜினி டெ மாஸ் ரன் எனும் நெடுந்தூர ஓட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் இப்போட்டியின் சின்னம், டீ சட்டைகள் இந்நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டீன் நகைக்கடை உரிமையாளர் டத்தோ சிராஜுடின், மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகுல் ஹாமீட் உள்பட மலேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.

 

 

Exit mobile version