Site icon அநேகன்

ராகுல் காந்தியின் வரலாற்று பூர்வ வருகை – டத்தோஸ்ரீ வேள்பாரி!

கோலாலம்பூர், மார்ச்.9 –

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தியின் மலேசிய பயணம் ஒரு வரலாற்று பூர்வ வருகை என ம.இ.கா. பொருளாளர் டத்தோஸ்ரீ  வேள்பாரி வர்ணித்துள்ளார்.  சிங்கப்பூருக்கு மூன்று நாட்கள்  பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அதில் ஒரு பகுதியாக இன்றிரவு மலேசியாவுக்கு வருகைப் புரியவுள்ளார்.

நாளை, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள பேங்க் ரக்யாட்டின் மெனாரா கெம்பாரில் இளம் நிபுணத்துவ அமைப்பின் ஏற்பாட்டில்  நடைபெறும் 2018 மலேசிய இந்திய இளைஞர் மாநாட்டை, ராகுல் காந்தி , ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்துடன் இணைந்து தொடக்கி வைக்கவுள்ளார்.

இன்று இரவு 10.30 மணியளவில் மலேசியா வந்தடையும்  ராகுல் காந்தி  நாளை காலை வர்த்தக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் மாநாட்டில் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து, செந்தூல் எச்.ஜி.எச் மாநாட்டு மண்டபத்தில் அரசு சார்பற்ற இயக்கங்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அதன் பின்னர், மஇகா தலைமையகத்திற்கு வருகை புரியவிருக்கிறார். ம.இ.கா-வுக்கு ராகுல் காந்தி வருகைப் புரிவது ஒரு வரலாற்று பூர்வ அங்கம் என வேள்பாரி வர்ணித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரத்துக்கு காங்கிரஸ் போராடிய காலத்தில் மலேசியாவிலும் சுதந்திரத்துக்காக இந்தியர்களைப் பிரதிநிதிக்க மலேசிய இந்தியர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

இன்றளவும் மலேசிய இந்தியர் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எனும் மிகப் பெரிய ஆலமரத்தின் ஒரு விழுதுகாகவே பார்க்கப்படுகிறது என வேள்பாரி தெரிவித்தார்.  ம.இ.கா. தலைமையகத்தில்  கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியப் பின்னர் மாலை 5.30 மணியளவில் மரியாதை நிமித்தமாக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை ராகுல் காந்தி சந்திக்கப்போவதாக அவர் கூறினார்.

 

Exit mobile version