Site icon அநேகன்

இத்தாலி சிரி ஆ லீக் – டோரினோவை வீழ்த்தியது ஏ.எஸ் ரோமா!

ரோம், மார்ச்.10 –

இத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் ஏ.எஸ் ரோமா 3 – 0 என்ற கோல்களில் டோரினோவை வீழ்த்தியது. பியோரென்டினா அணியின் கேப்டன் டாவிடே அஸ்டோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று மரணம் அடைந்ததை அடுத்து கடந்த வாரம் நடைபெறவிருந்த சிரி ஆ லீக் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிரி ஆ லீக் போட்டி மீண்டும் தொடங்கிய வேளையில் ஏ.எஸ். ரோமா வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஒலிம்பிக் அரங்கில் திரண்டிருந்த ரசிகர்களும் ஆட்டக்காரர்களும் அஸ்டோரிக்காக மெளன அஞ்சலி செலுத்தினர். பியொரென்டினா அணியின் கேப்டனாக இருந்தாலும் அஸ்டோரி இதற்கு முன்னர் ரோமா கிளப்பில் விளையாடியுள்ளார்.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த வேளையில் 56 ஆவது நிமிடத்தில் மனோலாஸ் போட்ட கோலின் மூலம் ஏ.எஸ் ரோமா 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. அந்த கோலுக்குப் பின்னர் அஸ்டோரியை நினைவு கொள்ளும் வகையில் , வானை நோக்கி தனது கைகளை எழுப்பினார். 73 ஆவது நிமிடத்தில் டேனியல் டே ரோசி கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஏ.எஸ் ரோமாவின் மூன்றாவது கோலை பெல்லெகிரினி போட்டார்.

Exit mobile version