Site icon அநேகன்

மலேசிய இரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைக்கின்றது!

கோலாலம்பூர், ஜூலை 28-
வேலையில்லா பட்டதாரி (வி.ஐ.பி. 2) படத்தின் புரமோஷனுக்காக நடிகர் தனுஷ், பாலிவூட் நடிகை காஜோல், அப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மலேசியா வந்துள்ளனர்.

வி.ஐ.பியின் முதலாவது பாகம் உலகமெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றதை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும்இப்படத்தில் பாலிவூட்டின் முன்னாள் கதாநாயகியான காஜோல் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மலேசியாவில் இந்த படத்தை கபாலி திரைப்படத்தை வெளியீடு செய்த மாலீக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று வி.ஐ.பி. 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஜாலான் முன்ஷி அப்துல்லாவின் முன்புறம் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியிலுள்ள சாலைகள் மூடப்பட்ட நிலையில் மாலை மணி 4.00 தொடங்கி இரசிகர்கள் அங்கு குவியத் தொடங்கினர். எனினும், இரவு மணி 8.30 அளவில் நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக நடிகர் தனுஷ் நடித்த படங்களிலுள்ள பாடல்களுக்கு உள்ளூர் கலைஞர்கள் நடனமாடினர். அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் கூறுகையில், வி.ஐ.பி. 2 படத்தின் புரமோஷனுக்காக பல இடங்களுக்கு சென்ற போதிலும் மலேசியாவிலுள்ள இரசிகர்கள் அளிக்கும் ஆதரவு தன்னை பிரமிக்க வைப்பதாக கூறினார்.

தொடர்ந்து, இரசிகர்களுக்காக வி.ஐ.பியின் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடலை பாடி தனது இரசிகர்களை தனுஷ் மகிழ்வித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை காஜோல் மலாய் மொழியில் நன்றியைத் தெரிவித்ததோடு இங்கு அதிகமான அன்பானவர்கள் கூடியிருப்பதாக சொன்னார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சார கனவு எனும் தமிழ்ப்படத்தில் நடித்த அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.

எனக்கு தமிழ் தெரியாத போதிலும் நடிகர் தனுஷ் தனது உரையில் என்ன கூறினார் என்பது தெளிவாக புரிகின்றது. இரசிகர்கள் இந்த படத்தை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பது அவர்கள் தரும் ஆதரவு வாயிலாக தாம் உணருவதாகவும் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும்படியும் காஜோல் கூறினார்.

இதனிடையே, இப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், தாம் இயக்கும் முதலாவது நேரடி நிஜ படம் வி.ஐ.பி. 2 என கூறியதோடு தனது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொடுக்கும் ஆதரவைப் போல் தனக்கும் இரசிகர்கள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கூறுகையில், வி.ஐ.பி. முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியை அடையும் என கூறியதோடு மலேசியாவில் அதிகமான இந்திய திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டுமென தனது கோரிக்கையை முன்வைத்தார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் வி.ஐ.பி. 2 படத்தின் இந்தி டிரெய்லர் இரசிகர்களுக்காக ஒளிபரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version