கோலாலம்பூர், மார்ச்.31-
தேர்தல் ஆணையம் செயல்படுத்த விருக்கும் தேர்தல் தொகுதி எல்லையின் மறுசீரமைப்பு தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என சிலாங்கூர் பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் ரெட்சுவான் ஒத்மான் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்படும்போது , தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வந்துள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் தேசிய முன்னணி அதிக பட்சமாக 65 விழுக்காடு வாக்குகளைதான் பெற்றுள்ளது.எனினும் நாடாளுமன்றத்தில் அதிக தொகுதிகளை வெல்வதன் வழி ( ஏறக்குறைய 80 முதல் 90 விழுக்காடு வரை ) தேசிய முன்னணி மத்தியில் ஆட்சி அமைக்கிறது என அவர் கூறினார்.
அரசியல் தேவைக்காக இந்த தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 14 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி எல்லைகளின் சீரமைப்பு இன வாரியாக தொகுதிகளைப் பிரித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லை சீரமைப்பின்போது அதிகமான கலப்பு தொகுதிகள் உருவாக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட இனத்தின் விழுக்காடு அதிக அளவில் இல்லாமல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
எனினும் 2008 ஆம் ஆண்டு தொடங்கி இந்த தொகுதிகளில் எதிர்கட்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதால் தேர்தல் ஆணையம் தற்போது மீண்டும் பழைய நிலையில் தொகுதிகளைப் பிரித்துள்ளது. குறிப்பாக சில தொகுதிகளில் மலாய்க்காரர்களும் சில தொகுதிகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் எல்லை சீரமைப்பை மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை அடிப்படையாக வைத்து தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்பட்டிருந்தாலும் 14 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறையும் அதே நிலையில் இருக்கும் என உறுதியாக கூற முடியாது என ரெட்சுவான் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி மற்றும் 1 எம்.டி.பி போன்ற விவகாரங்கள் தோன்றவில்லை.எனவே வாக்காளார்களின் தற்போதைய சிந்தனையைக் கணிப்பது கடினம் என அவர் சொன்னார்.
