Site icon அநேகன்

இரண்டு கோல்களில் அசத்தினார் பேல் ; பார்சிலோனாவைக் காப்பாற்றினார் மெஸ்சி!

மாட்ரிட், ஏப்.1 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்ற வேளையில் லியோனெல் மெஸ்சி போட்ட கோலால், பார்சிலோனா தோல்வியில் இருந்து தப்பியது.சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் 3 – 0 என்ற கோல்களில் லாஸ் பல்மாசை வீழ்த்தியது. அதேவேளையில் பார்சிலோனா 2- 2 என்ற கோல்களில் செவியாவுடன் சமநிலைக் கண்டது.

கிரான் கனாரியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியின் தாக்குதல் நட்சத்திரம் கேரத் பேல் இரண்டு கோல்களைப் போட்டு அசத்தினார். ரியல் மாட்ரிட்டின் முதல் கோலை கேரத் பேல் போட்ட வேளையில் பினால்டியின் வழி கரீம் பென்சிமா இரண்டாவது கோலைப் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் கேரத் பேல் மீண்டும் பினால்டியின் வழி ரியல் மாட்ரிட்டின் மூன்றாவது கோலைப் போட்டார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் யுவன்டசை சந்திக்க விருப்பதால் ரியல் மாட்ரிட் பயிற்றுனர் சினிடின் சிடான் இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை களமிறக்கவில்லை.

இதனிடையே இந்த பருவத்துக்கான ஸ்பெயின் லா லீகா போட்டியில் தோல்வியே காணாத தனது சாதனையை பார்சிலோனா தக்க வைத்து கொண்டுள்ளது. ராமோன் சான்செஸ் பிஸ்சுவான் அரங்கில் நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா இரண்டு கோல்களில் பின் தங்கியது.

ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது லுவிஸ் சுவாரேஸ் பார்சிலோனாவின் முதல் கோலைப் போட்டார். ஒரு நிமிடத்துக்குப் பின்னர் லியோனெல் மெஸ்சி போட்ட கோலின் வழி பார்சிலோனா ஆட்டத்தை சமப்படுத்தியது. கடந்த 13 மாதங்களில் பார்சிலோனா, ஸ்பெயின் லா லீகா போட்டியில் எந்த ஓர் ஆட்டத்திலும் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version